தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நேரடி அழைப்பு!

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றத்தில் கூட்டாகச் செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்குத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்திடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரடி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று சனிக்கிழமை (25.01.2025) மாலை-05 மணியளவில் நல்லூரிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து இதுதொடர்பிலான அழைப்புக் கடிதத்தை அவர் நேரடியாக வழங்கி .வைத்துள்ளார்.

அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒரு தலைப்பட்சமாகத் தீர்மானங்களை நிறைவேற்றக் கூடியதான பலத்தில்  அரசாங்கம் உள்ள நிலையில் அரசியல் தீர்வு விடயத்தில் நாடாளுமன்றத்திலுள்ள தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்படவில்லையாயின் 19 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையுடன் தொடர்புடைய அறுதிப் பெரும்பான்மை நிலைப்பாட்டைத் தமிழ்மக்கள் சார்பாக வெளிப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம்.
நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தலா ஒவ்வொரு ஆசனத்தைக் கொண்டிருக்கின்ற தமிழ்த்தேசியமக்கள் முன்னணி மற்றும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் தமிழர் தாயகத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மையான 10 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்துவதற்குரிய ஒரு முயற்சியை மேற்கொள்ளுகின்ற வகையிலேயே இந்த முயற்சி அமைந்துள்ளது.

இவற்றின் அடிப்படையில் எதிர்வரும்-27 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை-04 மணியளவில் கலந்துரையாடலொன்றை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளோம். குறித்த கலந்துரையாடலில் தங்கள் கட்சியும் கலந்து கோள்ள வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். திட்டமிட்டுள்ள திகதி மற்றும் நேரம் தொடர்பில்  மாற்றங்கள் ஏதேனும் தேவைப்படின் மூன்று கட்சிகளுக்கும் பொருத்தமான வேறொரு திகதி மற்றும் நேரத்தையும் கூட்டாக இணைந்து தீர்மானிக்க முடியும் என்பதையும் தங்களின் கவனத்துக்கு முன்வைக்கின்றோம். தங்களின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் எனவும் குறித்த கடிதத்தில்   உள்ளது.