பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் இலங்கை பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது பிலியந்தலை பிரதேசத்தில் நால்வர் நேற்று சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டனர்.
பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரான பிரதேசத்தில் சட்ட விரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
பிலியந்தலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட இரு வேறு சுற்றிவளைப்புக்களின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 22 – 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 886.5 லீற்றர் கோடா அடங்கிய 05 பீப்பாய்கள், 05 லீற்றர் சட்ட விரோத மதுபானம், 884 லீற்றர் கோடா அடங்கிய 05 பீப்பாய்கள் மற்றும் 05 லீற்றர் சட்ட விரோத மதுபானம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





