பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறைகூவல்!

சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும் சிங்களப் பேரினவாத மூலோபாயம் மாறாது என்பதே நாம் கண்ட அனுபவப் பாடம். அதைவிடுத்து இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என நம்புவோமேயானால் எம்மைப் போன்ற அரசியல் அறிவீலிகள் யாரும் இருக்க முடியாது. தற்போதைய அரசானது ‘இலங்கையர்’ எனும் அடையாளத்தின் கீழ் தமிழ்மக்களின் தனித்துவத்தை அழித்து சிங்கள மேலாண்மையை நிறுவுவதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மேற்கூறிய விடயங்களைக் கருத்தில் கொண்டு வரும் சிறிலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தைத் தொடர்ச்சியாகத் தமிழர் தேசம் கரிநாளாக அனுசரித்தது போலவே இம்முறையும் அனுசரிக்க அறைகூவல் விடுக்கின்றோம் எனப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாகப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் இன்று புதன்கிழமை (29.01.2025) பிற்பகல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம்-04 ஆம் திகதியினைச் சிறிலங்கா தேசம் தமது சுதந்திர தினமாகக் கொண்டாடி வருகின்றது. ஆயினும் அன்றைய தினமே பறிக்கப்பட்ட தமிழர் தேசத்தின் இறையாண்மை ஆங்கிலேயரிடமிருந்து சிங்களப் பேரினவாதிகளுக்குக் கைமாற்றப்பட்ட தினமாகும். வரலாற்று ரீதியாக இலங்கைத் தீவின் வடக்கு- கிழக்குப் பகுதிகள் ஒன்றிணைந்த பகுதிகள் இத் தீவின் மூத்த குடிகளான தமிழ்மக்களின் தாயக பூமியாக இருந்தது என்பதையும் அந்த தாயகபூமி இறையாண்மை உள்ள தனித் தேசமாக இருந்தது என்ற வரலாற்று உண்மையை மறுதலித்து எமது சுதந்திரம் சிங்கள தேசத்திடம் கையகப்படுத்தப்பட்ட நாளாகவே இந்நாள் உள்ளது.

இன்று தேசியமக்கள் சக்தி எனும் பெயரில் ஆட்சி ஏறியுள்ள ஜனதா விமுக்திப் பெரமுன எனும் சிங்கள அடிப்படைவாதக் கட்சி தம்மை மாற்றத்தின் நாயகர்களாகக் காட்ட முற்பட்டாலும் அவர்களின் உண்மை முகம் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டே இருக்கின்றது. என்றுமில்லாதவாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி ஏறியவர்கள் இலங்கைத் தீவின் அதி உச்சப் பிரச்சினையான தமிழ்மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக எவ்வித அக்கறைகளுமின்றி ஏன் அவ்வாறான ஒரு பிரச்சினையே இல்லை என்ற கோதாவிலேயே நடந்து வருகின்றனர். அத்துடன் சிங்களப் பேரினவாதத்தால் இனத்தின் மீதான இன அழிப்பினை மறுதலித்து அலட்சியத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் இறந்து விட்டதாகக் கூறுகின்றனர். அரசியல் கைதிகள் யாரும் இல்லை என முன்னைய அரசாங்கங்களைப் போலவே தமிழ்மக்களின் போராட்டத்தினைப் பயங்கரவாதமாகச் சித்தரிக்க முயல்கின்றனர்.

சிங்கள தேசம் தமது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அதே நாளை நாம் சுதந்திரத்தினை இழந்த நாளாகக் கருத்தில் கொண்டு பொது இடங்கள், கடைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாடசாலைகள், வணக்கத் தலங்கள், எமது வீடுகள் என்பவற்றில் கறுப்புக் கொடிகளைக் கட்டி உங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந் நாளில் உங்களின் உரிமைக் குரலுடன் சிங்கள அரசுக்கெதிரான தன்னெழுச்சியான போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழர் தேசம் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இறையாண்மையுள்ள தனித் தேசமாக மலரும் நாளே தமிழினத்தின் சுதந்திர நாள் என்பதனை மனதில் கொண்டு விடுதலைக்காய்ப் போராட அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.