போராட முன்வந்துள்ள கலைப்பீட ஒன்றியத்தின் பின்னால் ஓட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அணிதிரள வேண்டும்

இன்று தமிழர் தாய்நிலத்தில், யாழ்.பல்கலைக்கழகச் சமூகத்தில் தோன்றியுள்ள மிகப் பாரதூரமான விவகாரம் தொடர்பாக அனைத்து தமிழ் அமைப்புக்களும், தலைவர்களும், கற்றறிந்த சமூகமும் ஆழமாகக் கரிசனை கொள்ள வேண்டும். போதை ஒழிப்பு விவகாரத்தில் தனது பதவியைத் துச்சமெனத் துறந்த கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமினதும் மற்றும் போராட முன்வந்துள்ள கலைப்பீட ஒன்றியத்தின் பின்னாலும் ஓட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அணிதிரள வேண்டுமென ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு இதுதொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தம் தின்ற தாய்மண்ணை போதை, மது, கலாச்சார சீரழிவு எனும் அரக்கர்கள் கபளீகரம் செய்வதை எதுவரை எமது சமூகம் பொறுமையாக கையாளப் போகின்றது? வெளிப்படையாகவே போதை சார் ஒழுக்க விழுமியங்களிற்கு நடவடிக்கை எடுத்தமைக்கு, அதில் எந்த விட்டுகொடுப்பும் இல்லாமல் இருந்தமைக்காக ஒரு பீடாதிபதி மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை பாரதூரமான, எமது சமூகத்தின் ஒழுக்க நெறியைக் கேள்விக் குறியாக்கும், நன்னடத்தை சார் விழுமியங்களிற்குத் தமிழ்ச் சமூகத்தின் அறிவுப் புலத்தில் விடுக்கப்பட்ட பாரிய சவாலாகும்.

கடந்த 15 ஆண்டுகளில் போதையின் பிடியில் சிக்கி தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை, குறிப்பாக மாணவ சமூகம் படும் அவலம் வார்த்தையால் வர்ணிக்கமுடியாது. பல பெற்றோர் நடைபிணங்களாக வாழ்கின்றனர். தினம் தினம் விபத்துக்களும், தற்கொலைகளும், இளவயது நெறிபிறழ்வுகளும், கல்வியிலிருந்து இடைவிலகல்களும் எம் தாய்மண்ணில் போதை எனும் அரக்கனால் மலிந்துவிட்ட நிலை கண்டு சமூக, தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் மனதினுள் தொடர்ந்தும் அழுத வண்ணமே உள்ளனர்.

இந்த நிலையில் போதைக்கெதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பலமான குரல்கள் எழுந்திருப்பது கற்றறிந்த தமிழ்த் தேசியத்திலும், சமூக சிந்தையிலும் ஆழமாக ஊறிய சமூகத்தின் மாற்றத்திற்கான திறவுகோலான  ஊடகப் பின்புலத்திலிருந்து வந்த பேராசிரியர் ஒருவரின் செயலினூடாக வெளிப்பட்டு இருப்பது அவருக்குப் பின்னால் யாழ்ப்பாணப் பல்கலையின் மிகப்பெரும் மாணவ சக்தியான கலைப்பீட மாணவர் ஓன்றியம் போராட்டத்தை ஆரம்பித்திருப்பது தமிழ்ச் சமூகத்திற்கு ஆறுதல் அளிக்கும் நல் அறிகுறியாகும்.

மாற்றத்தை, தூய்மையாக்கலைப் பற்றிப் பேசுகின்ற இந்த தருணத்தில் தமிழ்ச் சமூகம் தன்னைப் பீடித்துள்ள பீடைகளைக் களைந்து, புதிய போதையற்ற தேசம் நோக்கிய பாதையை ஆரம்பிக்கட்டும். அதற்கு அனைவரும் ஒன்றாகக் கரங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்துடன் இணைத்திடுவோம். நல்ல சிந்தனையுள்ள அனைவரும் தமிழ்த்தேசிய ஆன்மாவை, தேசத்தினை இருப்பைப் பாதுகாக்க அணி திரண்டு ஆதரவை வெளிப்படுத்துவோம் எனவும் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.