‘அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் முன்னாள் ஜனாதிபதிகளிற்கான சில சலுகைகளை குறைக்கமுடியாது”

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு அரசியலமைப்பின் சில பிரிவுகள் தடையாக உள்ளதாக அரசாங்கம் நியமித்த குழு தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தபடி சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து ஆராய்வதற்காக அவர் குழுவொன்றை நியமித்திருந்தார்.

இது குறித்து ஆராய்ந்த குழுவினர் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் முன்னாள் ஜனாதிபதிகளிற்கான சில சலுகைகளை  குறைக்கமுடியாது என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.

அரசமைப்பின் 36 வது பிரிவில் இது குறித்து சில விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதை அந்த குழுவினர் சுட்டிக்;காட்டியுள்ளனர்.

அரசமைப்பின் இந்த பிரிவுகளை மாற்றுவது பல காரணங்களால் அரசாங்கத்திற்கு சவாலான விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதிகளிற்கான உரிமை சட்டத்தின்படி,முன்னாள், ஜனாதிபதிகளிற்கு வாடகைகளை வசூலிக்காமல் வீடுகளை வழங்கவேண்டும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அரசியலமைப்பின்படி முன்னாள் ஜனாதிபதிகளிற்கான ஓய்வூதியம்   போன்ற சில சலுகைகளை உடனடியாக இரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான ஓய்வூதியங்களை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவிற்கு தற்போதைய 3000 சதுர அடி வீட்டுக்கு பதில் வேறொரு வீட்டை வழங்க தயார் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.