ஏழாலையில் இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியில் இரண்டு லட்சம் ரூபா மோசடி

யாழ்.ஏழாலை கிழக்கைச் சேர்ந்த கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளரான இளம் குடும்பஸ்தரிடம் செவ்வாய்க்கிழமை (21.01.2025) பிற்பகல் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து ஏமாற்றி இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல்-01.15 மணியளவில் குறித்த இளம் குடும்பஸ்தரின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட நபர் தாங்கள் டயலொக் ஒவ்விசிலிருந்து கதைப்பதாகவும், போன வருஷம் டிசம்பர் மாதம்-21 ஆம் திகதி உங்களுக்கு ஐந்து லட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டம் கிடைத்திருப்பதாகவும், இதுதொடர்பில் மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் நீங்கள் மெசேஜ் பார்க்கவில்லையா? எனவும் வினாவியுள்ளான். அதற்கு அப்படியொரு தகவலை நான் பார்க்கவில்லை என இளம் குடும்பஸ்தர் பதில் வழங்கியுள்ளார்.

நீங்கள் மெசேஜ்கள் டிலிற் பண்ணியிருக்கிறீர்களா? என மறுமுனையிலிருந்து வினாவப்பட்ட போது அதற்கு இளம் குடும்பஸ்தர் ஆம் எனப் பதில் வழங்கியுள்ளார். இந்நிலையில் மெகா அதிர்ஷ்டத்திற்கான காலக்கேடு முடிவடையவிருப்பதாகத் தெரிவித்து உங்கள் வங்கி இலக்கத்தைக் கூறுமாறு தெரிவிக்குமாறு கோரவே குறித்த இளம் குடும்பஸ்தரும் தனது வங்கி இலக்கத்தைக் கூறியுள்ளார். அதன் பின்னர் உங்களுக்கு மெசேஜ்ஜில் ஆறு இலக்கங்களைக் கொண்ட ஒரு மெசேஜ் வரும். அதனைத் தம்மிடம் கூறுமாறும் வினாவவே குறித்த இளம் குடும்பஸ்தரும் அதனைக் கூறியுள்ளார். இதனையடுத்துக் குறித்த இளம் குடும்பஸ்தரின் வங்கிக் கணக்கிலிருந்து சடுதியாகப் பணத் தொகை குறைவடைந்து சென்றது.

இதனையடுத்துச் சுதாகரித்துக் கொண்ட இளம் குடும்பஸ்தர் புன்னாலைக்கட்டுவன் வடக்கில் தனது சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு விரைந்து சென்று நடந்தவற்றைத் தெரிவித்து தனது சேமிப்புக் கணக்கின் செயற்பாடுகளைத் தற்காலிகமாக முடக்கியுள்ளார். இதனால், அவரது எஞ்சிய பெரும்தொகைப் பணம் மோசடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்துக் குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேரடியாக முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.