கொள்கலன் பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் பலி !

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு இரத்தினபுரி பிரதான வீதியின் உடகட வீதி சந்திக்கு அருகில், மோட்டார் சைக்கிள் ஒன்று  கொள்கலன் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று சனிக்கிழமை (01) இரவு இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்டது.

இதன்போது, கொள்கலன் பாரவூர்தியின் இடது பக்கம் மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து ஓட்டுனர் கொள்கலனின் கீழ்பகுதியில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குருவிட்ட, மாலவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய கொள்கலன் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.