நெருக்கமான ஒருவரை இழப்பதாக உணர்கின்றேன்!

மாவை சேனாதிராஜாவின் மறைவை எனக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமான ஒருவரை இழப்பதாக உணர்கின்றேன். அவரது இழப்பு உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாதவொன்றாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

மாவை சேனாதிராஜாவும் நானும் 70களில் எங்கள் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்கினோம். நான் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் அவ்வாண்டு மாவை சேனாதிராஜா பொதுத்தேர்தலில் வெற்றி பெறவில்லை.

இருப்பினும் அவர் ஏற்கனவே ஒரு இளம் தலைவராகப் பணியாற்றி வந்தார். யாழ்ப்பாணத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிய காலகட்டத்தில் அவரை தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்க பல சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அந்த காலகட்டத்தில் நான் ஒரு அமைச்சராக பதவி வகித்துக் கொண்டிருந்தேன். 1989 க்குப் பிறகு அவரை பாராளுமன்றத்தில் சந்தித்தேன். அந்த சந்தர்ப்பத்திலிருந்தே எமக்கிடையில் ஒரு நல்ல உறவு ஏற்ப்பட்டது. வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மாவை சேனாதிராஜா அர்ப்பணிப்புடன் செயற்ப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அவர் மக்களுக்காக குரல் எழுப்பினார்.

நான் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்பட்ட போது மாவை சேனாதிராஜா எழுப்பிய கேள்விகளுக்கு பாராளுமன்றத்தில் நேரத்தை ஒதுக்கிக் கொடுத்திருக்கின்றேன். இனப்பிரச்சினைகள் தொடர்பில் அவர் அந்த சந்தர்ப்பங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றார்.

குறிப்பாக முக்கியமாக 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் முழுமையான தீர்வுகளை எட்டுவது சாத்தியமில்லை என்றாலும், மாவை சேனாதிராஜா அதனை அடிப்படையாகக் கொண்டே முன்னேற முயற்சித்தார்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்த நாங்கள் அனைவரும் உடன்பட்டோம். நான் ஜனாதிபதியாக பதவி வகித்த போது மாகாண சபை மட்டத்தில் அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான பின்னணியை உருவாக்கினேன். மாகாணசபை வடக்கிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், அதன் அபிவிருத்தியை முன்னேற்றுவதற்காக 8 மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதே எங்கள் அனைவரினதும நோக்கமாக இருந்தது. மேற்கு மாகாணத்திற்கு மட்டும் இதை மட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, யாரும் தாழ்த்தப்பட்டதாக உணராத வகையில் நாம் செயல்பட வேண்டும். யாழ்ப்பாண மக்களுக்கு நில உரிமைகளை வழங்குவதில் மாவை சேனாதிராஜா முன்னின்று செயற்ப்பட்டார். காணாமல் போனவர்களின் பெயர்ப் பட்டியலை சரிபார்த்து அவற்றின் பணிகளை செய்து முடிப்பதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

இன்று, வடக்கில் ஒரு கடுமையான பிரச்சினையாக இருக்கும் இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடியைத் தீர்க்க நாம் ஒன்றிணைய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியிருக்கின்றார். மாவை சேனாதிராஜா தனது நடவடிக்கைகளை வடக்கிற்கும் தமிழ் மக்களுக்கும் மட்டும் மட்டுப்படுத்தவில்லை. நாட்டின் பிற பகுதிகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் அவர் பெரும் பங்களிப்பைச் செய்தார்.

51 நாள் அரசியல் நெருக்கடியின் போதும் மாவை சேனாதிராஜாவிடமிருந்து எனக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. இவ்வாறு செயல்பட்ட ஒரு தலைவரின் இழப்பு வடக்கின் தமிழ் மக்களுக்கும், யாழ்ப்பாணத்திற்கும், நாட்டிற்கும் பெரும் இழப்பாகும். எனக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமான ஒருவரை இழப்பதாக உணர்கின்றேன். மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு யாழ்ப்பாண மக்களுக்கும், அவரது கட்சியினருக்கும், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளது.