போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

வட பகுதி எங்கும் விடுதலைப்புலிகளின் காலத்தில் இல்லாத போதைப்பொருள் பாவனை தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், போதைப்பொருள் அதிகரிப்பை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (30) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டபோதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

தற்போது முல்லைத்தீவு மாவட்டம் உட்பட வடபகுதி எங்கும் போதைப்பொருட்கள் அதிகமாக காணப்படுகின்றன.

போதைப்பொருட்கள் என்னும்போது கசிப்பு, கஞ்சா என்பவற்றைத் தாண்டியும் இன்னும் புதுவிதமான பல போதைப்பொருட்கள் எமது பகுதிகளில் பெருகிவருவதாக மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர்.

விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான போதைப்பொருட்கள் எவையும் இல்லை. ஆனால், தற்போது எமது பகுதிகளில் போதைப்பொருட்கள் பல மடங்கு பெருகிக் காணப்படுகின்றன.

யுத்தம் மௌனிக்கப்பட்ட பிறகு, கடந்தகால அரசாங்கங்கள் எமது தமிழ் மக்களை அழிக்கும் நோக்கில் இந்த போதைப்பொருள் பாவனையை எமது பகுதிகளில் ஊடுருவச் செய்து வேடிக்கை பார்த்தனர்.

தற்போதும் பெரியவர்கள் முதல் இளையோர் வரை பெருமளவானோர் போதைப்பொருள் பாவனைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய அரசதரப்பு பிரதிநிதிகளிடம் எமது பகுதிகளில் பெருகிக்கிடக்கின்ற இந்த போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருக்கிறோம்.

எனவே தற்போதைய அரசு  போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கூடும் என நம்புகின்றோம் என்றார்.