மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை வழங்கி அரசாங்கம் அரசியலமைப்பை மீறியுள்ளது. ஜனாதிபதியும் அரசாங்கமும் பாவம் என்றே குறிப்பிட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரசியலமைப்பை அறியாவிடினும் நீதியரசர் (ஓய்வுநிலை)அரசியலமைப்பையும், சட்டங்களையும் நன்கு அறிவார். ஆகவே தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டதை போன்று முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியக் கொடுப்பனவை இரத்துச் செய்ய முடியாது என்பதை அரசாங்கத்துக்கு தெளிவாக குறிப்பிட்டிருப்பார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியக் கொடுப்பனவை இரத்துச் செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் இவர்கள் அரசியலமைப்பின் 36(2) உறுப்புரையை அறியவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இந்த வாக்குறுதியை மறக்கடிக்கச் செய்வதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதிகளை அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றுவதாக குறிப்பிட்டுக் கொள்கிறார்.
மேலும், மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை வழங்கி அரசாங்கம் அரசியலமைப்பை மீறியுள்ளது. ஜனாதிபதியும் அரசாங்கமும் பாவம் என்றே குறிப்பிட வேண்டும் என்றார்.



