மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பிலிருக்கும் அம்மன் பீடம் அமைந்துள்ள காணியை மட்டக்களப்பு மாநகர சபையினர் தனியார் ஒருவருக்கு மீன்வாடி அமைக்க முறைகேடாக வழங்கியிருந்தனர். அந்த மீன்வாடியை அங்கிருந்து அகற்றுமாறு கடந்த மாதம் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றம் மனித உரிமை ஆணையம் கட்டளையிட்டும் இதுவரை மீன்வாடி அகற்றப்படவில்லை என பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
பார் வீதியில் செழியன் பூங்காவுக்கு அருகில் கடற்கரை பகுதியில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட காணியை, மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய நிர்வாகம் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் காணி அபகரிப்பிலிருந்து பாதுகாத்து வருகிறது.
ஆலய உற்சவ காலங்களில் புனித மஞ்சள் நீராடுதல், கும்பஞ் சொரிதல் போன்ற புனித காரியங்களுக்காக அந்த காணியை பயன்படுத்தி வந்ததுடன் அங்கு வேல் நாட்டப்பட்டு அம்மன் பீடம் அமைத்தும் வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த வருடம் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் அக்காணி மாநகர சபைக்கு உட்பட்டது என போலியான ஆவணங்களை தயாரித்து, இந்த காணியை யாரேனும் பன்படுத்துகின்றீர்களா என கிராமசேவகரிடமோ பொது அமைப்புகளிடமோ, கிராம மக்களிடமோ கேட்டறியாமல், பிரதேச செயலாளரின் அனுமதியுமின்றி, இந்து மக்களின் புனிதத் தன்மையை இழிவுபடுத்தும் வகையில் மீன்பிடி உரிமையாளர் ஒருவருக்கு மீன்வாடி அமைக்க குத்தகைக்கு வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஆலய நிர்வாகம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்தனர்.
அதனையடுத்து, ஆணைக்குழுவினர் நடத்திய விசாரணையில், பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அரச காணியை மாநகர சபையினர் முறைகேடாக குத்ததைக்கு வழங்கியுள்ளமை தெரியவர, அந்த மீன்வாடியை அக்காணியிலிருந்து அகற்றுமாறு தெரிவித்திருந்தனர்.
அதேபோன்று கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் மீன்வாடியை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இருந்தபோதிலும், இந்த இரு தீர்மானங்களை குறித்த அரச திணைக்களம் மீன்வாடியை இன்று வரை அகற்றவில்லை.
இது, இந்து மதத்துக்கும் இந்து மக்களுக்கும் செய்யும் அநீதி என ஆலய பரிபாலன சபை மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த காணியிலிருந்து மீன்வாடியை அகற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



