முன்னாள் கடற்படை தளபதிகள் ;வெளிநாட்டு தூதரகங்களிற்கு அரசியல் நியமனங்கள்

முன்னைய அரசாங்கங்களைபோல தேசிய மக்கள் சக்தியும் வெளிநாட்டு தூதரகங்களிற்கு அரசியல் நியமனங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையின் வெளிநாட்டு சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என கடந்தகாலங்களில் விமர்சனங்களை முன்வைத்திருந்த போதிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அரசியல் நியமனங்களில் ஈடுபடவுள்ளது.

கடந்த வருடம் ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க பதவியேற்ற பின்னர் அமெரிக்க தூதுவர் மகிந்த சமரசிங்கவை தவிர அரசியல்ரீதியில் நியமிக்கப்பட்ட அனைத்து தூதுவர்களையும் அரசாங்கம் மீள அழைத்திருந்தது.

இது குறித்து ஏற்கனவே அதிருப்தி வெளியிட்டுள்ள இராஜதந்திரிகள் மகிந்த சமரசிங்கவின் நியமனமும் அரசியல் நியமனமே ஏன் அவரை மீள அழைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும் சர்வதேச நாணயநிதியத்துடன் ஈடுபாட்டை பேணுவதற்கு மகிந்தசமரசிங்க அமெரிக்க தூதுவராக தொடர்ந்தும் பணிபுரிவது அவசியம் என அரசாங்கம் தெரிவிக்கின்றது.

எனினும் சர்வதேச நாணயநிதியத்துடன் தொடர்ந்தும் ஈடுபாட்டை பேணுவதற்கு தூதுவரின் பங்களிப்பு அவசியமில்லை என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை உலகநாடுகளின் தலைநகரங்கள் சிலவற்றிற்கு அரசியல் நியமனங்கள் சிலவற்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பானிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் ஜானக குமாரசிங்க நியமிக்கப்படவுள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கான தூதுவராக முன்னாள் கடற்படை தளபதி உதேனி ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை நியுயோக்கில் ஐக்கிய நாடுகளின் தூதுவராக சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்கவை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாக்கிஸ்தானிற்கான தூதுவராக முன்னாள் கடற்படை தளபதி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் முன்னையஅரசாங்கங்கள் தூதுவர் பதவிகளிற்கு இலங்கை வெளிநாட்டு சேவை சாராதவர்களை நியமித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.