வடக்கில் இன்றுமுதல் நீண்டதூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிகளுக்கு நாளை முதல் பிரயாணச் சிட்டை வழங்கப்பட வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் நாளை சனிக்கிழமை (01.02.2025) முதல் நீண்டதூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிகளுக்கு பிரயாணசிட்டை வழங்கப்பட வேண்டுமெனவும், அதேபோன்று உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் எதிர்வரும் மார்ச் மாதம்-01 ஆம் திகதிக்கு முன்னர் பயணச் சிட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்  வெள்ளிக்கிழமை(31.01.2025) மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இது தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர் பரிசோதக உத்தியோகத்தர்கள் ஊடாக சோதனைகள் முன்னெடுக்கப்படும். பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் தாங்கள் செலுத்தும் கட்டணங்களின் மீதிப் பணம் தரப்படுவதில்லை எனவும், கூடுதலான கட்டணம் அறவிடப்படுவதாகவும் முறைப்பாடுகள் முன்வைத்தமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.