வாக்காளர் இடாப்பை டிஜிட்டல் மயமாக்கும் முறைமை!

நாடு தழுவிய ரீதியில் வாக்காளர் இடாப்பை டிஜிட்டல்மயமாக்கும் முறைமையின் கீழ், தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையில் இணைய தொழில்நுட்பம் மூலம் வாக்காளர்களை பதிவு செய்வது தொடர்பாக வேடுவ குடிமக்கள் உட்பட தம்பனை பிரதேசவாசிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று அண்மையில் நடைபெற்றது.

மஹியங்கனை தம்பனை கனிஷ்ட கல்லூரியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேடுவ தலைவர் உரு வாரியே வன்னில அத்தோ உட்பட ஆதிவாசி சமூகத்தின் அனைத்து பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

கையடக்கத் தொலைபேசி ஊடாக இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாக்களிப்பதை பதிவு செய்வது குறித்து தேர்தல் அலுவலக அதிகாரிகளால் சிறப்பு பயிற்சி நிகழ்ச்சியும் இங்கு  ஆரம்பிக்கப்பட்டது.

தம்பனை பிரதேசத்தில் சுமார் 800 குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன், வயது பூர்த்தியடைந்த அனைவரையும் இணையவழியில் வாக்களிக்க பதிவு செய்யும் நோக்கில் இது தொடர்பான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், டிஜிட்டல் பதிவேடு தயாரிப்பது தொடர்பாக கிராம அதிகாரிகளுக்கும் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வருகின்றது என்பதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.