வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவுகளுக்கான முழு பொறுப்பையும் அரச நிருவாகமும் அரசும் ஏற்க வேண்டும்

மட்டக்களப்பில்  வெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை அழிவடைந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் எதிர்காலத்தில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இதற்கான முழு பொறுப்பையும் அரச நிருவாகமும் அரசும் பொறுப்பெடுத்தாக வேண்டும்.  பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நஷ்டஈடு வழங்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிகரை வீதியிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (20) நடைபெற்று ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில்  பெய்த மழை காரணமாக தென்னிலங்கை பகுதியிலுள்ள பல குளங்கள் திறக்கப்பட்டதுடன்,  மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல குளங்கள் திறக்கப்பட்டு  வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.

அரசாங்கம் இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் வயல் நிலங்களை வெள்ளத்தால் பாதிக்க விடாமல் தடுத்திருக்க முடியும்.

ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை எனவே இந்த பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கு  பொறுப்பு கூறவேண்டியது அதற்கு பொறுப்பான திணைக்களத்தையும் அரசையும் சார்ந்தது.

கருத்து சொல்வது என்பது வேறு முடிவு எடுப்பது என்பது வேறு அனைவரும் கருத்துக்களை கேட்டு அரசாங்க அதிபர் எதிர்காலத்தில் அனர்த்தம் ஏற்படும் என விடும்பட்சத்தில் அரச திணைக்களம் உடனடியாக விரைந்து விசேட கூட்டங்களை நடாத்தி பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அடையாளப்படுத்தி அந்த வேளாண்மையை அறுவடை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தால் கூடுதலான சேதம் ஏற்பட்டிருக்காது.

அதுமட்டுமல்ல முன்கூட்டியே இந்த விடையம் பலருக்கு தெரிந்தும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை  தண்ணீரில் மிதக்கின்றது. இயற்கை அனர்த்தங்களால் ஏற்படுகின்ற அழிவை  நிறுத்த முடியாது.

ஆனால் இந்த விடயம் தொடர்பில்  விவசாய திணைக்களம்,  அரசாங்க அதிபர், சில விவசாய அமைப்புக்களின் செயற்பாடுகளை நேர்தியாக மேற்கொண்டிருந்தால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மையை பாதிப்பில் இருந்து காப்பாற்றியிருக்க முடியும்..

கடந்த அரசாங்கத்தால் விவசாயிகள்  நெல்லை கொள்வனவு செய்யும் பிரச்சனைக்கு பல தரப்புடன்  முரன்பாட்டிற்கு முகம் கொடுத்தவர்கள் இருந்தபோதும் நல்லாட்சி புரிகின்ற இந்த  புதிய அரசு இதுவரை நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?

எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக அரசாங்கம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.  அதேவேளை அறுவடை செய்யவுள்ள நெல்லை இதுவரைக்கும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் செய்யவில்லை. நெல்லை கொள்வனவு செய்யவேண்டும்.

வெல்லாவெளி,   மண்டூர்,  வேற்றுச்சேனை, சித்தாண்டி , வந்தாறுமூலை பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மக்கள்  இடம்பெயர்ந்து வருகின்றனர்.

எனவே அந்தபகுதியில் வெள்ளம் வராமல் தடுக்கும் செயற்திட்டத்தை நடை முறைப்படுத்துங்கள். நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள்.  சில விவசாய அமைப்புக்கள் விட்ட தவறுகளை எதிர்காலத்தில் விடமால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.