ஹஜ் யாத்திரை செல்வதற்கு பதிவு செய்தவர்கள் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் தங்களது முகவர் நிறுவனங்களை சந்தித்து பயண ஏற்பாடுகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
அத்துடன் தெரிவுசெய்யப்பட்டுள்ள 92 முகவர் நிறுவனங்களை தவிர வேறு எந்த முகவர் நிறுவனங்களுக்கும் தங்களின் கடவுச்சீட்டை வழங்கவேண்டாம் என ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பி.எம். கரீம் தெரிவித்தார்.
சிறிலங்கா ஹஜ் முகவர்கள் சங்கம் இன்று திங்கட்கிழமை (03) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்தி்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வதற்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பதிவு செய்துகொண்டவர்கள் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் தங்களது முகவர் நிறுவனங்களை நாடி, பயண ஏற்பாடுகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
ஹஜ் நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் எதிர்வரும் 14ஆம் திகதிக்குள் சவூதி ஹஜ் அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கிறது. அதனால் ஹஜ் யாத்திரிகர்கள் தாமதமடையும் போது அவர்களின் பயண ஏற்பாடுகளை செய்வதில் அசெளகரியங்கள் ஏற்படும்.
அதேநேரம் ஹஜ் யாத்திரிகர்களை அழைத்துச்செல்ல 92 முகவர் நிறுவனங்களுக்கே முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அனுமதி வழங்கி இருக்கிறது.
ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி கிடைக்கப்பெற்றவர்கள் இந்த 92 முகவர் நிறுவனங்களில் தாங்கள் விரும்பிய முகவர் நிறுவனத்திடம் மாத்திரம் தங்களின் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் வேறு முகவர் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டாம். இந்த முகவர் நிறுவனங்களை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் இணையதளத்தில் பார்வையிடலாம்.
அத்துடன் இந்த முறை இலங்கைக்கு சவூதி அரசாங்கத்தினால் 3500 ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றுள்ளது. ஹஜ் கடமைக்கு செல்வதற்காக இதுவரை 4200பேர் பதிவு செய்துள்ளனர்.
என்றாலும் அவர்களில் 2 ஆயிரம் பேரே 5ஆயிரம் ரூபா செலுத்தி பதிவை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். முன்னுரிமை அடிப்படையில் ஏனைய 1500பேருக்கு இரண்டு தினங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் விரைவாக பதிவை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திணைக்களத்தினால் ஏனையவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்கும்.
அதேநேரம் இந்தமுறை ஹஜ் கடமைக்காக ஆகக்குறைந்த கட்டணமாக 22இலட்சம் ரூபா அறவிடப்படும். என்றாலும் முகவர் நிறுவனங்களின் சேவையின் அடிப்படையில் கட்டணத்தில் மாற்றம் ஏற்படலாம்.
ஹஜ் கடமைக்கு செல்பவர்கள் தங்கள் முகவர் நிறுவனங்களின் சேவைகள் தொடர்பில் அவர்களுடன் ஒப்பந்தம் செய்யும்போது இந்த விடயங்கள் தொடர்பில் நன்கு வாசித்து பார்த்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்றார்.



