‘இந்துக்களின் பெரும் சமர்’ என வர்ணிக்கப்படுகின்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான இந்துக்களின் 14 ஆவது பெரும் சமர் கிரிக்கெட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை (07.02.2025) காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. நாளை சனிக்கிழமையும் (08.02.2025) போட்டி இடம்பெறவுள்ளது.
கொழும்பு இந்துக் கல்லூரி அடுத்த வருடம் தனது பவளவிழாக் கொண்டாட்டங்களை மிகவும் பிரமாண்டமான முறையில் ஆரம்பிக்கவுள்ளமையால் இந்துக்களின் சமரையும் அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. இந் நிலையில் கொழும்பு இந்துக் கல்லூரியின் வேண்டுகோளுக்கு அமைய இம்முறைப் போட்டியை யாழ்ப்பாணம் நடாத்துவதற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்வந்துள்ளது.
இந்துக்களின் பெரும் சமரின் ஒரு கட்டமாக இரு பாடசாலை அணிகளுக்குமிடையிலான சொல்லாடல்-2025 நிதர்சனத்தின் களம் விவாதப் போட்டி இன்று மாலை-06 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் நடைபெறவுள்ளது. “ஈழமணித் திருநாட்டிலே தமிழ்மக்கள் எதிர்நோக்கும் அன்றாட இடர்களுக்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள் அரச ஊழியர்களைக் காட்டிலும் அரசியல்வாதிகளே!” எனும் தலைப்பை ஆதரித்தும், மறுதலித்தும் குறித்த விவாதச் சமர் இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




