புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டாகச் செயற்படுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (27.01.2025) மாலை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று காலை- 8.45 மணிக்கு என்னுடன் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே .சிவஞானம் தொடர்பு கொண்டு இன்று மாலை நடைபெறவிருந்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சி கலந்து கொள்ளாது எனவும், எதிர்வரும்-08 ஆம் திகதி தங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் முடிவினை அறிவிப்பதாகவும் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் கலந்துரையாடினேன்.
இதனடிப்படையில் 08 ஆம் திகதி சனிக்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னரான தமிழரசுக் கட்சியின் பதிலின் பின்னர் கலந்துரையாடலை மேற்கொள்வது என்று தீர்மானித்துள்ளோம். இந்த விடயத்தைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.



