நாடாளுமன்ற குழுக்களுக்கு எதிர்க்கட்சிகளுக்கு நியாயமான சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறையிட நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் எச்சரிக்கை விடுத்தனர்.
நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை (05) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையில்,
எதிர்கட்சியில் 12 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் பல்வேறு மாகாணங்கள் கலாசாரத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்.
ஆனால் நாடாளுமன்ற வராலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் பாராளுமன்ற செயற்குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றலை அரசாங்கம் வேண்டுமென்றே குறைத்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் சபை முதல்வரை சந்தித்து கலந்துரையாடி இருந்தோம். ஆனால் இதுவரை இதுதொடர்பில் எந்த அறிவிப்பை எங்களுக்கு தெரிவிக்கவில்லை.
நாடாளுமன்ற குழுக்களுக்கு உறுப்பினர்களை அதிகரிப்பதன் மூலம் எந்தவித மேலதிக செலவும் ஏற்படுவதில்லை. இதற்கு முன்னரும் செயற்குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அதிகமான செயற்குழுக்களின் எண்ணிக்கையில் அதிக சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் சிறிய வித்தியாசமே இருந்து வந்துள்ளது.
குறிப்பாக 8ஆவது நாடாளுமன்றத்தில் கோப் குகுவின் தலைவராக எதிர்க்கட்சி உறுப்பினராக சுனில் ஹந்துன்னெத்தி இருந்து வந்தார். மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் 6பேர் இருக்கையில் 4பேர் கோப் குழுவில் அங்கம் வகித்தார்கள்.
அதனால் எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை செயற்குழுக்களில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதன் பின்னர் பாராளுமன்ற செயற்குழுக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களை பெயரிடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிடுகையில், பாராளுமன்ற செயற்குழுக்களுக்கு எதிர்கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றல் இல்லாமலே அரசாங்கம் இந்த குழுக்களை கொண்டு செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
அதனால் எதிர்கட்சியில் இருக்கும் கட்சி தலைவர்கள் அதிகமானவர்கள் இதுதொடர்பில் சிறப்புரிமை பிரச்சினை எழுப்ப இருக்கிறார்கள்.
அதனால் நாங்கள் முன்வைத்திருக்கும் சிறப்புரிமை பிரச்சினையை இன்றைய தினமே எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த தயாசிறி ஜயசேகர எம்.பி. குறிப்பிடுகையில், பாராளுமன்ற குழுக்களில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும்வகையில் எதிர்க்கட்சிக்கு போதுமான சந்தப்பத்தை வழங்க வேண்டும் என்றே இங்கிலாந்து பாராளுமன்ற சம்பிரதாய ஏஸ்கின் மே புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசாங்கம் கோப் குழுவுக்கு தலைவரை நியமித்திருப்பதுபோன்று கோபா குழுவுக்கும் தலைவர் ஒருவரை நியமித்திருப்பதாக தெரியவருகிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றல் இல்லாமல் எவ்வாறு குழுக்களின் தலைவர் தெரிவு செய்ய முடியும். எதிர்கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றல் இல்லாமல் பாரபாளுமன்ற குழுக்களை முன்னெடுத்துச்செல்ல முடியாது.
அதனால் குழுக்களுக்கு ஆளும் தரப்புக்கும் உறுப்பினர்களை அதிகரித்து, எதிர்கட்சிக்கும் அந்த சந்தர்ப்பத்தை வழங்குமாறே கேட்டுக்கொள்கிறோம். இல்லாவிட்டால் பாராளுமன்றத்தை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும்.
அத்துடன் நாங்கள் இந்த பிரச்சினையை இத்துடன் முடிவுக்கு கொணடுவரப்போவதில்லை. அனைத்து பாராளுமன்றங்களின் ஒன்றியத்திலும் முறையிடுவோம் என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த அமைச்சர் அருன கருணாதிலக்க குறிப்பிடுகையில், இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் பல தடவைகள் கதைத்திருக்கிறோம்.
எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற குழுக்களின் கூட்டு எண்ணிக்கையை அதிகரித்தும் இருக்கிறோம். நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாக எதனையும் செய்ய வில்லை என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகையில், பாராளுமன்ற குழுக்களின் எண்ணிக்கை தொடர்பில் நாங்கள் எதிர்க்கட்சி தெரிவிப்பதற்கு முன்னர் நாங்கள் அதிகரித்திருக்கிறோம்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் குழு உள்ளிட்ட அனைத்து குழுக்களுக்கு உறுப்பினர் தொகையை அதிகரித்திருக்கிறோம்.
அதிகரித்ததை ஐக்கிய மக்கள் சக்திக்கு எடுத்துக்கொண்டது. அதனால் அனைத்து பாராளுமன்ற ஒன்றியங்களில் நீங்கள் முறையிட்டால் அதனைவிட அதிக விடயங்களை நாங்களும் முறையிடுவோம்.
2015இல் எதிர்கட்சியில் குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களே இருந்தார்கள் அதனாலே அன்று எதிர்க்கட்சிக்கு பாராளுமன்ற குழுக்களுக்கு அதிக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதனால் பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு மாறாக பாராளுமன்ற குழுக்களுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாங்கள் தயார் இல்லை என்றார்.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள், எங்களது சிறப்புரிமை பிரச்சினையை முன்வைப்பதற்கு இடமளியுங்கள். அதன் பின்னர் அது சிறப்புரிமை குழுவுக்கு அனுப்புவதா இல்லையா என தீர்மானிங்கள் என கேட்டுக்கொண்டனர்.
இறுதியாக சபாநாயகர் இதற்கு பதிலளிக்கையில், நிலையியற் கட்டளைகளுக்கு அமையவே என்னால் செயற்பட முடியும்.
அதனால் இந்த பிரச்சினை தொடர்பில் பாராளுமன்ற நடவடிக்கைகள் குழு மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை குழு ஆகியவற்றில் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளுங்கள். அல்லது எனது தீர்மானத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வில் தெரிவிக்கிறேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், பாராளுமன்ற குழுக்களுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, சபாநாயகர், சபை முதல்கருடன் கலந்துரையாடினோம்.
என்றாலும் தீர்வு கிடைக்காததால் சிறப்புரிமை பிரச்சினை கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு கிடைத்திருந்தால் இந்த பிரச்சினை இங்கு எழுந்திருக்காது. அதனால் இது தொடர்பில் நியாயமான தீரவொன்றை வழங்க வோண்டும் என்றார்.





