நீதி அமைச்சரின் கருத்துக்குச் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநர் யோதிலிங்கம் கடும் கண்டனம்!

ஐக்கியமக்கள் சக்தி அரசாங்கத்தின் நீதி அமைச்சர் இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தான் இருக்கின்றார்கள் என்று கூறியிருக்கின்றார். இந்தக் கருத்தைக் கடுமையாகக் கண்டிப்பதாகச் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநரும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (18.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்கள் தங்கள் சொந்தக் குடும்ப விவகாரங்களுக்காகச் சிறைவாசம் அனுபவித்தவர்கள் அல்லர். அவர்கள் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைக்காகப் போராடி அதன் காரணமாகச் சிறைகளில் வாடுபவர்கள். இதனால், அவர்களை நாங்கள் அரசியல் கைதிகள் என்று தான் கூற வேண்டுமே தவிர பயங்கரவாதிகள் என்று கூறுவதற்கு எந்த உரிமையும் அரசாங்கத்துக்குக் கிடையாது. ஜேவிபியைத் தாய்க் கட்சியாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியும் ஆயுதப் போராட்டத்தை நடாத்திய ஒரு கட்சி. அவர்களில் பலரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டனர்.

எனினும், அவர்களைப் பயங்கரவாதிகள் என்று ஜேவிபி ஒரு தடவையும் அழைக்கவில்லை. தமிழ் இளைஞர்களை மாத்திரம் தான் பயங்கரவாதிகள் என்று சொல்லி அழைக்கின்றதொரு சூழல் காணப்படுகிறது. இது ஜேவிபியிடமுள்ள பச்சை இனவாதத்தை வெளிக்காட்டும் செயற்பாடாகும். இதுதொடர்பாக வலுவான கண்டனத்தைத் தமிழ்மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.