நுவரெலியாவில் பேரிக்காய் பயிர்ச்செய்கை மீள ஆரம்பம்

வருடாந்தம் இலட்சம் ரூபா வருமானம் ஈட்டக்கூடிய “நுவரெலியா அப்பிள்” என்றழைக்கப்படும் பேரிக்காய் பயிர்ச்செய்கை நுவரெலியாவில் புலுவல கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (30) ஆரம்பிக்கப்பட்டது.

சில காலத்துக்கு முன்னர் பக்டீரியா நோயினால் முற்றாக பாதிக்கப்பட்ட பேரிக்காய் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.

நுவரெலியா உதவி பிரதேச செயலாளர் சுஜானி வீரசிங்க தலைமையில் இப்பயிர்ச்செய்கை பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

 

பிரதேச செயலக மட்டத்தில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் “பழ கிராமங்கள்” திட்டத்துக்கு சமாந்தரமாக இந்த பேரிக்காய் பயிர்ச்செய்கை நுவரெலியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பிரதேச செயலகத்தில் இருந்தும் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு தெரிவு செய்யப்பட்டு, அந்த பிரதேசங்களுக்கே உரித்தான பழ வகை பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியா புலுஎல கிராம உத்தியோகத்தர் களத்தில் நடைபெற்ற “பழ கிராமம்” திட்ட நிகழ்ச்சியின்போது நுவரெலியா உதவி பிரதேச செயலாளர் சுஜானி வீரசிங்கவினால் புலுஎல கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களது தோட்டத்தில் உள்ள இடப்பரப்புக்கேற்ப பேரிக்காய் கன்றுகள் வழங்கப்பட்டன.

அத்துடன் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளால் சில கன்றுகள் நடப்பட்டன.

நடப்பட்ட கன்றுகள் சில மாதங்களுக்குப் பிறகு காய்க்கும் என்பதால் இக்கன்றுகளை மூன்றடி உயரத்துக்கு மட்டும் கத்தரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக நடவு செய்யப்படும் ஒரு செடியின் மூலம் வருடத்துக்கு சுமார் ஐம்பதாயிரம் ரூபா வருமானம் ஈட்ட முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.