பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பெண் உட்பட நான்கு சந்தேக நபர்கள் பிபில பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபில பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பிபில நகரம் மற்றும் ரத்துபஸ்கெட்டிய ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபில பிரதேசத்தில் வசிக்கும் 23, 31 மற்றும் 51 வயதுடைய மூன்று நபர்களும் 34 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் பல்வேறு வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய மூன்று சந்தேக நபர்களும் திருடப்பட்ட பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





