மீண்டும் இனவாதத்துக்கு இடமில்லை

தெற்கில் இனவாதத்தை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். ஆனால், நாம் இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்துவோம். நாட்டின் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப எமது அரசாங்கம் முழு மூச்சாக செயற்படுகிறது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ். வல்வெட்டித்துறையில் இன்று (31) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

வடக்கு மக்கள் கடந்த இரண்டு பிரதான தேர்தல்களின் போதும் தேசிய மக்கள் சக்திக்கு அளித்த வாக்குகள் வெறுமனே ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கான புள்ளடி மாத்திரம் அல்ல. மாறாக அவை இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைவதற்கு வழங்கிய வாக்குகளாகும்.

 

இலங்கையில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு தெற்கு, மேற்கு, மலையகம் என பேதமின்றி அனைத்து மக்களின் ஆதரவுடன் அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல தசாப்தங்களாக ஆட்சியாளர்கள் மக்களை வடக்கு, கிழக்கு, தெற்கு, மலையகம் என பிளவுபடுத்தியே ஆட்சி செய்தார்கள். ஆனால், நாம் மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கு பதிலாக அவர்களை ஒன்றிணைக்கும் அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம்.

இதற்கு முன்னர் நாட்டில் மேல் மட்டத்தில் இருந்த ஒரு சில குடும்பங்களிடமே அதிகாரம் இருந்தது. ஆனால், இந்த நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலின்போது தீர்க்கமான முடிவை எடுத்திருந்தனர். உயர் மட்டத்தில் இருந்து சாதாரண மக்களிடத்தில் அதிகாரத்தை கைம்மாற்றினார்கள். எனவே, இந்த மக்களுடனேயே எமக்கு பிணைப்பு உள்ளது. கட்டம் கட்டமாக இந்த நாட்டை நாம் மீட்டெடுப்போம்.

அஸ்வெசும கொடுப்பனவை அதிகரித்துள்ளோம். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்கியுள்ளோம்.