மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை பிரதான வீதி மீள திறப்பு!

நேற்று மூடப்பட்ட கண்டி – மஹியங்கனை பிரதான வீதி இன்று புதன்கிழமை (22) காலை 06 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக பலத்த மழையுடனான சீரற்ற வானிலை நிலவி வருவதன் காரணமாக பல இடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கண்டி – மஹியங்கனை, உடுதும்பர, கஹடகொல்ல ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு, பாறைகள் சரிந்து வீதிகளில் விழும் அபாயகரமான சூழ்நிலைகள் காணப்பட்டதால் நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரை அவ்வீதி மூடப்பட்டிருந்தது.

கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்த அபாயகரமான சூழ்நிலைகள் தொடர்ந்து காணப்பட்டால் இரவு நேரங்களில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளின் பாதுகாப்புக்காக இவ்வீதி மீண்டும் இன்றைய தினம் இரவு மூடப்படும் என கூறினார்.