வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சைகளுக்கான கட்டணம் நீக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் பரீட்சைக் கட்டணம் செலுத்துவதால் எதிர்நோக்கும் சிரமங்களை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனத் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர்  செவ்வாய்க்கிழமை (14.01.2025) இரவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசு கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியில் வருடாந்த நிதி ஒதுக்கீடு மூலம் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். இது அனைவருக்கும் இலவசக் கல்வியை உறுதிப்படுத்தும் வழி.

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு இந்தத் தேவையைக் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க இது அவசியமாகும். இந்த முயற்சியின் மூலம் அனைத்து மாணவர்களும் பொருளாதாரச் சிரமங்களை எண்ணாமல் தங்களின் கல்விப் பயணத்தைத் தொடரும் வகையில் உரிமை கிடைக்குமென நம்பப்படுகிறது எனவும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.