நவ.5-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: வேட்பாளர்கள் ட்ரம்ப், கமலா ஹாரிஸ் இறுதிக்கட்ட பிரச்சாரம்

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் (60), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (78) இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதன்படி அந்த நாட்டில் நவம்பர் 5-ம் தேதி (இந்திய நேரப்படி நவ. 6) அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர்கமலா ஹாரிஸும், குடியரசு கட்சிசார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். இருவரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணம், மில்வாகி நகரில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கமலா ஹாரிஸ் பேசும்போது, “எனது தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து மட்டுமே பேசி வரு கிறேன். குறிப்பாக சுகாதார திட்டங் கள், குறு, சிறு தொழில்களின் வளர்ச்சி, நடுத்தர வர்க்க மக்களின் முன்னேற்றம் குறித்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளேன். ஆனால் டொனால்டு ட்ரம்ப், பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்து பேசி வருகிறார். மனித குலத்துக்கு எதிரான கருத்துகளை கூறி வரு கிறார்’’ என்று தெரிவித்தார்.

குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் ட்ரம்ப், மிக்சிகன் மாகாணம்,டிட்ராயிட் நகரில் நேற்று பேசும்போது, “கமலா ஹாரிஸ் மார்க்சிஸ்ட் சிந்தனை கொண்டவர். அவரது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. நான் அதிபரானால் அமெரிக்காவுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை வெளிநாட்டினர் பறிக்க அனுமதிக்க மாட் டேன். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன். 3-ம் உலகப் போரை தடுத்து நிறுத்துவேன்’’ என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக தேசிய அளவிலும் மாகாண அளவிலும் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தேசிய அளவில் சில கருத்துக்கணிப்புகள் கமலாவுக்கு ஆதரவாகவும் வேறு சில கணிப்புகள் ட்ரம்புக்கு ஆதரவாகவும் உள்ளன. எனினும் பெரும் பாலான கணிப்புகளில் இருவருக்கும் இடையிலான வாக்கு சதவீதத்தின் இடைவெளி ஒரு சதவீதமாக உள்ளது.

அதிபர் தேர்தல் நடைமுறை: அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாகவே பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியும். இதன்படி தேர்தலுக்கு முன்பாக இதுவரை 6.5 கோடி பேர் தங்கள் வாக்கினை பதிவு செய்து உள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலாவுக்கோ, குடியரசு கட்சி வேட்பாளர்டொனால்டு ட்ரம்புக்கோ, மக்கள்நேரடியாக வாக்களிக்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு)உறுப்பினர்களுக்கு வாக்களிப் பார்கள்.

அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 538 வாக் காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளரே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.

நவம்பர் 5-ம் தேதி (இந்திய நேரப்படி நவ. 6) வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு அன்றிரவு 50 மாகாணங்களிலும் வாக்குகள் எண்ணப்படும். பெரும்பாலும் அன்றிரவே அமெரிக்காவின் புதிய அதிபர் யார் என்பது தெரியவரும். கடந்த 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறிநீடித்தது. இதனால் சில நாட்களுக்குப் பிறகே ஜோ பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

தற்போதைய தேர்தலில் கமலா ஹாரிஸ், டொனால்டு ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவுவதால் இந்த முறையும் அதிபர் தேர்தலில் இழுபறி ஏற்படக்கூடும். தேர்தல் முடிவுகளை இறுதி செய்ய சில நாட்கள் ஆகலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்