இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கமனல அபிவிருத்தி உத்தியோகத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பெண் அதிகாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் வியாழக்கிழமை (25) வெவ்வேறு பகுதிகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து மேற்படி சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
தெனியாய பகுதியில் நபர் ஒருவருக்கு சொந்தமான வயல் நிலத்தில் இருந்த கொள்கலன் ஒன்றை தெனியாய கமனல சேவை பிரதேச அலுவலகத்தில் உதவி கமனல அபிவிருத்தி உத்தியோகத்தர் பரிசோதிப்பதற்காக வருகைத் தந்திருந்த நிலையில், முறைபாட்டாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும், அப்பகுதியில் கடமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் 25 ஆயிரம் ரூபா பயணத்தை குறித்த உத்தியோகத்தர் இலஞ்சமாக கோரியுள்ளதாக முறைபாடளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 11.20 மணி அளவில் தெனியாய கமனல சேவை பிரதேச அலுவலகத்தில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேரஹர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதி பத்திரம் அச்சிடும் பிரிவு அலுவலகத்தின் உதவி அதிகாரி ஒருவர், சம்மாந்துறை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் 11 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளதுடன், பிறகு அதை 10 ஆயிரம் ரூபாவாக குறைத்து முறைப்பாட்டாளரிடமிருந்து அப்பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். மேலும் மஹரகம இலங்கை ஆயுர்வேத மருந்தக கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றி வந்த மகளிர் பாதுகாப்பு பெண் அதிகாரி ஒருவரும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




