எதிர்க்கட்சிகளின் பலமான கூட்டணியை உருவாக்குவதற்கு அரசாங்கமே அடிக்கல் நாட்டியிருக்கிறது

நீதிமன்றம் நியாயத்தை நிலைநாட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தியை வீட்டுக்கு அனுப்புவதற்கான பலமான கூட்டணியை உருவாக்குவதற்கு அரசாங்கமே அடிக்கல் நாட்டியிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நீதிமன்றம் நியாயத்தை நிலைநாட்டியுள்ளது. ஜனநாயகத்தை இல்லாதொழித்து எமது உரிமைகளை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தது.

அந்த அடக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாம் ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான சக்தியை உருவாக்குவதற்கு அரசாங்கம் அடிக்கல் நாட்டியுள்ளது.

நாட்டில் 60 சதவீத விருப்பத்தைப் பெற்ற எதிர்க்கட்சிகள் ஒன்று ஓரணியில் ஒன்று திரண்டுள்ளன. அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் இந்த ஒற்றுமையுடன் செயற்படுவோம்.

பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டிருப்போம். சர்வதேசத்துடனும் இணைந்து அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.