கம்புறுபிட்டிய மதுவிருந்தில் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவர் கொலை

கம்புறுபிட்டிய பகுதியில் மதுவிருந்தொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டு கைகலப்பாக மாறியதில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு நபர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஹேன பகுதியில் சனிக்கிழமை (12) மதுவிருந்தொன்றில் கலந்து கொண்டிருந்த நண்பர்களிடையே வாய்த்தர்க்கம் நீண்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் படுகாயமடைந்துள்ளதுடன்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் காயமடைந்த மற்றைய நபர்  கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதுடன், சம்பவத்தை அடுத்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக  விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். 40 வயதுடைய யஹலகொட பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், 42 வயதுடைய கரபுட்டுகல பகுதியை சேர்ந்த நபர் காயமடைந்துள்ளார். இதேவேளை தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் கம்புறுபிட்டிய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.