நடந்து வருகிறது கடல்.
பிள்ளைகளை குடிக்கிறது அலை.
காற்றெங்கும் மிதக்கிறது
சனங்களின் முகாரி.
மணலெங்கும் வெளித்தெரிகின்றன
கடற்கரை முகங்கள்.
தண்ணீரென்று நம்பியிருந்த நீர்
வரலாற்றின் பக்கங்களில்
கண்ணீரை நிரப்பி விட்டு
அமைதியாய் சென்று அடங்குகிறது.
எஞ்சியவர்களின் ஓலங்களில்
நிறைகிறது கடல்வெளி.
நிர்வாணக் குழந்தைகளை
புதைத்து வைத்திருக்கின்றன மணல்கள்.
அமைதியாகி விட்ட கடலின் கரைகளில்
ஆர்ப்பரிக்கும் வலிகளோடு
சனங்கள் ஓப்பாரி பாடுகிறார்கள்.
கரை நெடுக நின்று
கடலைப் பார்த்து கதறும்
மிஞ்சியவர்களின் பாதங்களை
வந்து வந்து தொட்டுச் செல்கிறது அலை.
தீப்பெட்டிக் குடிசைகளையும்
தூக்கியெறிந்து விட்டுப் போன
கடலின் வெளியில்
இருக்க இடமற்று அலைகின்றன சனங்கள்.
மீன் பரப்பி வைத்த
வெள்ளைக் கடற்கரை மண்ணெங்கும்
அடுக்கி வைக்கப்படுகின்றனர் மனிதர்கள்.
நத்தார் புது உடுப்போடு விறைத்துக் கிடக்கிறது
ஒரு சிறுமியின் உடல்.
அவள்
நள்ளிரவில் வணங்கித் திரும்பிய
தேவாலயத்தை இப்போது காணவில்லை.
ஒரு கையுடைந்து சரிந்திருக்கும்
தேவாலயச் சிலுவையின் நுனியில்
யாரோ ஒரு குழந்தையின் காற்சட்டை
தொங்கிக் கொண்டிருக்கிறது.
நத்தார் பாப்பா கொடுத்த ரொபிகளை
இறுகப் பிடித்தபடி கிடக்கிறது
சேறு படிந்த ஒரு சிறுவனின் முகம்.
ஒரு தாய்
குழந்தையின் பெயரைச் சொல்லி குழறுகிறாள்.
ஒரு குழந்தை
அம்மா என்று கதறுகிறது.
ஒரு மனைவி கணவனை இழுத்து வருகிறாள்.
ஒரு கணவன்
மனைவியின் முகத்தை மடியில் வைத்தபடி
வானத்தை பார்த்து வழிகிறான்.
ஒரு அப்பா
கண்டு பிடித்த ஒரு பிள்ளையின்
உடலைக் கிடத்திவிட்டு
மற்ற பிள்ளையை தேடிக் கொண்டு ஓடுகிறார்.
ஒரு சிறுவன்
தப்பிப் பிழைத்த தென்னை மர நுனியிலிருந்து
காப்பாற்றும் படி கூக்குரலிடுகிறான்.
ஒரு அக்கா
இரத்தமொழுக எழுந்து நடந்து வருகிறாள்.
ஒரு கைக்குழந்தை
உயிரற்று அலைகளில் மிதந்து வருகிறது.
ஒரு நாய்
கட்டட இடிபாடுகளுக்குள் தெரியும் சேலையை
பிடித்து இழுத்தபடி ஊளையிடுகிறது.
ஞாபகங்களால்
யாரையும் கொல்ல விரும்பாத
இந்தக் கவிதை
கடலையே பார்த்தபடி
தன்னந்தனியே
கடற்கரை மணலில் அமர்ந்திருக்கிறது.
தீபிகா