‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமையுடன் (ஜனவரி 8, 2026) 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அமரர் லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை (8) பொரளை பொது மயானத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அத்திட்டிய பகுதியில் வைத்து லசந்த விக்ரமதுங்க கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். ஊழல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த அவரது இழப்பு, இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கு விழுந்த பெரும் அடியாகக் கருதப்படுகிறது. 17 ஆண்டுகள் கடந்தும், இந்தப் படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அன்நாரது குடும்பத்தினர், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்போது கருத்துத் தெரிவித்தவர்கள், கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நீதியை நிலைநாட்டுவதாக உறுதியளித்த போதிலும், விசாரணைகள் மந்தகதியிலேயே உள்ளதாகக் கவலை வெளியிட்டனர். லசந்த விக்ரமதுங்க தொழில்முறை சட்டத்தரணியாவதுடன், ஊடகத்துறையில் நுழைவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவராவார்.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பின்னரே முழுநேர ஊடகவியலாளராகத் தன்னை மாற்றிக்கொண்டு, 1994 இல் லால் விக்ரமதுங்கவுடன் இணைந்து ‘சண்டே லீடர்’ பத்திரிகையைத் தொடங்கினார். அத்தோடு லசந்த விக்ரமதுங்க மாத்திரமன்றி இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள போதும், அவற்றில் ஒரு வழக்குக் கூட முழுமையாக விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், யுனெஸ்கோ அவருக்கு ‘உலக ஊடக சுதந்திர விருது’ வழங்கி கௌரவித்தது. சர்வதேச ஊடக நிறுவனம் (IPI) அவரை உலகின் 50 துணிச்சலான ஊடகவியலாளர்களில் ஒருவராக அறிவித்தது. இதேவேளை, லசந்தவின் துணிச்சலான எழுத்துக்களும், அவர் எழுதிய “And Then They Came For Me” எனும் தலையங்கமும் இன்றும் உலகளவில் ஊடகப் போராட்டத்தின் அடையாளமாகப் போற்றப்படுகின்றன. கடந்த வாரம் கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களை நினைவுகூரும் அருங்காட்சியகம் ஒன்றில் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் உருவச்சிலைகள் திரைநீக்கம் செய்யப்பட்டன.
அரசியல்வாதிகளால் செய்ய முடியாதவாறு, வடக்கு மற்றும் தெற்கு மக்களை இவ்வாறான ஊடகப் போராளிகளின் தியாகம் ஒன்றிணைத்துள்ளமையை இது சுட்டிக்காட்டுகிறது. பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தும், லசந்தவின் குடும்பத்தினர் இன்றும் சர்வதேச ரீதியில் நீதிக்காகப் போராடி வருகின்றனர். எதிர்வரும் காலத்திலாவது இந்தப் படுகொலைக்கான உண்மையான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் என ஊடக அமைப்புகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.




