2027ஆம் ஆண்டுக்கான வைத்தியர்களது இடமாற்றப் பட்டியல் தயாரிப்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிருப்தியடைந்துள்ளதோடு, தாபன விதிக்கோவைக்கு அமைவாக சீரான இடமாற்றப் பொறிமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் அன்பாஸ் பாருக் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் அன்பாஸ் பாருக் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் இலவச சுகாதார சேவையை சமமாக வழங்குவதற்கு நீதியான இடமாற்றப் பொறிமுறை அவசியமாகும். வைத்தியர் பற்றாக்குறை நிலவியபோதும், அவர்கள் தங்களது எல்லைகளைத் தாண்டிச் சேவையாற்றுவதாலேயே சர்வதேச அளவிலான சுகாதாரச் சேவை சாத்தியமாகியுள்ளது. எனினும், கடந்த 2025 ஆம் ஆண்டு வரையான இடமாற்றப் பொறிமுறையில் சுகாதார அமைச்சு ஒரு வார காலக்கெடு விதித்து முன்னெடுத்த நடவடிக்கையினால் 50 சதவீதமான இடமாற்றங்களே இடம்பெற்றன.
இதனால் பல வைத்தியர்கள் பாதிக்கப்பட்டு, சேவையை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறும் நிலை உருவானது. தற்போது 2027ஆம் ஆண்டுக்கான இடமாற்றப் பட்டியலைத் தயாரிக்கும் போது, விண்ணப்பிப்பதற்கான தகுதித் திகதியாக வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜூன் 30ஆம் திகதியை சுகாதார அமைச்சு தன்னிச்சையாக மாற்றியுள்ளது.
இவ்வாறான தன்னிச்சையான முடிவுகளால் வைத்தியர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் கலந்துரையாடி அதிருப்தியை வெளியிட்டுள்ளோம். நாடளாவிய ரீதியில் மக்களுக்குச் சீரான சுகாதாரச் சேவையை உறுதி செய்ய, இடமாற்றச் சபைகளின் ஊடாகத் தாபன விதிக்கோவைக்கு அமைவாக வெளிப்படையான பொறிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.





