மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவியபோதிலும் தற்போது நாட்டில் 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா குறிப்பிடுகையில்,
ஞாயிற்றுக்கிழமை (01) என்ற போதிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதோடு, நாளை பௌர்ணமி தினத்திலும் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
சாதாரணமாக இந்நிலைமை உருவாவதற்கு முன்னர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை தினமாகும். நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால், ஐ.ஓ.சி நிறுவனம் ஏற்கனவே தீர்மானித்தபடி வழமை போலவே எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும்.
பொதுவாக பௌர்ணமி தினங்களில் எரிபொருள் போக்குவரத்து இடம்பெறுவதில்லை என்றாலும், முன்னரே தீர்மானித்தபடி நாளை (02) எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காகத் தேவையான அளவு பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தொடர்பாக எந்தவித தேவையற்ற அச்சமும் கொள்ள வேண்டியதில்லை என்றார்.





