அடுத்த சபாநாயகர் யார்? – அரசாங்கத்திடம் சஞ்சீவ எதிறிமான கேள்வி

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், சபாநாயகர் தனது பதவியில் தொடர முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிறிமான தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் புதன்கிழமை  (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கேள்வியை  முன்வைத்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்திடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அடுத்த சபாநாயகர் யார்? தற்போதைய மதிப்பிற்குரிய சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தின் துணை செயலாளர் நாயகம் மற்றும் நிர்வாகத் தலைவர் இணைந்து கடுமையான புகார் ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த முறைப்பாடு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் நாடாளுமன்றத்தின் தலைமை ஆசனத்தை வகிப்பவராகவும், அரசியலமைப்பு சபையின் தலைவராகவும் செயற்படுகிறார். அரசியலமைப்பு சபை, இலங்கை அரசியலமைப்பின் கீழ் மிகுந்த அதிகாரம் கொண்ட நிறுவனம். அரசியலமைப்பின் 41A பிரிவும் அதனுடன் தொடர்புடைய அட்டவணையும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு மற்றும் அரசியலமைப்பு சபை இடையே வலுவான சட்டப்பூர்வ தொடர்பு இருப்பதை தெளிவுபடுத்துகின்றன.

உதாரணமாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களை நியமிப்பதில் அரசியலமைப்பு சபை நேரடியாக ஈடுபடுகிறது. இத்தகைய பின்னணியில், தன்னையே குறிவைத்து விசாரணை நடைபெறும்போது, சபாநாயகர் தனது பதவியில் தொடர முடியாது.

மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் நாம் கேள்வி எழுப்புகிறோம். நீங்கள் மற்றும் உங்கள் அரசாங்கம் நாட்டிற்கு முன்வைத்த அரசியல் நெறிமுறை, இன்று உங்கள் ஆட்சிக்குள்ளேயே சவாலுக்கு உள்ளாகியுள்ளது.

சபாநாயகரே, இப்போது உங்கள் முன்னோடியான அசோக ரணவல எடுத்துக்காட்டைப் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது. அதனால்தான் அரசாங்கத்திடம் நான் ‘அடுத்த சபாநாயகர் யார்?’ என்று கேள்வி எழுப்புகிறேன் என அவர் தெரிவித்தார்.