தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக, அந்த வழியாகச் சென்ற மருத்துவ தம்பதியினர் மேற்கொண்ட மனிதாபிமான முயற்சி அனைவரினதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த நால்வர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் வெலிப்பென்ன நுழைவாயில்களுக்கு இடையில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொரி ஒன்றுடன், சிமெந்து ஏற்றிச் சென்ற மற்றுமொரு வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அந்த வழியாகப் பயணித்த கம்பூருபிட்டிய ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் மற்றும் அவரது கணவரான தெனியாய தேரங்கல ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆகியோர் உடனடியாகச் செயற்பட்டுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக தங்கியிருந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.
டயர்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லொரியின் பின்சக்கரம் காற்றிறங்கியதால், அதனை மாற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன்போது அதே திசையில் பயணித்த சிமெந்து ஏற்றிச் சென்ற வாகனம், கட்டுப்பாட்டை இழந்து கொள்கலன் லொரியின் பின்புறத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் சிமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்தின் முன்பகுதியில் பயணித்த மூவர் மற்றும் கொள்கலன் லொரியின் சாரதி என நால்வர் வாகனத்திற்குள் சிக்கி காயமடைந்தனர். வாகனத்திற்குள் சிக்கியிருந்த சாரதியை மீட்பதற்கு சுமார் மூன்று மணிநேரம் போராட வேண்டியிருந்தது. அவருக்கு வாகனத்திற்குள்ளேயே ஒட்சிசன் வழங்கப்பட்டு, மருத்துவ ஆலோசனையின் கீழ் மிகக் கவனமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு வழித்தடம் இரண்டு மணிநேரமும், மீட்புப் பணிகளின் போது வீதி முழுமையாகவும் சுமார் அரை மணிநேரம் மூடப்பட்டிருந்தது. காயமடைந்தவர்கள் தற்போது களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





