ஊழல் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாமலிருக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை தமிழரசுக் கட்சி எடுத்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் பாராளுமன்றக் குழுத்தலைவரான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில் கூடியது.
இச்சந்தர்ப்பத்தில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆராயப்பட்டது.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செயப்பட்டுள்ளமை, அமைச்சர் மீதான நிலக்கரி மோசடிக் குற்றச்சாட்டுத் தொடர்பில் போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படாமை,
நாட்டில் தற்போது பாரிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என்ற மூன்று காரணிகளின் அடிப்படையில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாமலிருக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.




