அம்பாறையில் மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திஸ்ஸபுரம் பிரதேசத்தில் உள்ள வயல் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (04) உத்தரவிட்டுள்ளது.
20 மற்றும் 21 வயதுடையவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வீரகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞனுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி திருமண நிகழ்வு ஒன்றில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (03) இரவு இளைஞனுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது சந்தேக நபர்கள் இருவரும் இளைஞனை பொல்லால் தாக்கி கொலைசெய்துள்ளனர்.
இது தொடர்பில் மத்தியமுகாம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





