அரச சுபநேரக் குழுவின்றி புத்தாண்டு நேரம் அறிவிப்பு: மாற்று நடவடிக்கையில் ‘சர்வஜன அதிகார’ தரப்பு!

இலங்கையின் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றீடாக சர்வஜன அதிகார கட்சியின் தலையீட்டில் இம்முறை சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கான சுபநேரங்கள் இன்று சனிக்கிழமை (14) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கலாசார திணைக்களத்தினால் 2024ஆம் ஆண்டு அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதிலிருந்து, இதுவரை புதிய குழுவொன்று அரசாங்கத்தினால் நியமிக்கப்படவில்லை. இம்முறை புத்தாண்டு சுபநேரங்கள் போயா குழு உறுப்பினர்களாலேயே வெளியிடப்பட்டிருந்தன. இதற்கு ஜோதிடர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

தகுதியான அரச சுபநேரக் குழுவை உடனடியாக நியமிக்குமாறு கோரி ஜோதிடர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை புத்தசாசன அமைச்சிடம் முறையிட்டிருந்தனர்.

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடின், மக்கள் ஏற்றுக்ககொள்ளக்கூடிய சுபநேரப் பட்டியலை தாமே வெளியிடப் போவதாக சர்வஜன அதிகார கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.

அந்த கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினர், இன்று காலை பாபிலியான சுனேத்ரா மஹா தேவி பிரிவெனாவிற்குச் சென்று பேராசிரியர் மௌலவி மெதகொட அபயதிஸ்ஸ தேரரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் அழைப்பின் பேரில் 17 பிரபல ஜோதிடர்கள் ஒன்றிணைந்து, விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின்னர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய புத்தாண்டு சுபநேரப் பட்டியலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டனர்.

அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து தவறியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள ஜோதிடர்கள், கலாசார விழுமியங்களைப் பாதுகாக்க இவ்வாறான மாற்று நடவடிக்கை அவசியம் எனத் தெரிவித்துள்ளனர்.