அரிசி பதுக்கல் மற்றும் சில்லறை விற்பனை மறுப்பு: வியாபாரிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை!

அரிசி கையிருப்பில் இருந்தும் அதனை சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மறுத்த வர்த்தகர்கள் சிலருக்கு எதிராக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் விசேட சோதனைகளின் ஒரு கட்டமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை கிருலப்பனை பொது சந்தை தொகுதியில் இந்த முற்றுகை நடத்தப்பட்டது.

சில்லறை விற்பனைக்காக அனுமதிப்பத்திரம் பெற்றிருந்த வர்த்தகர்கள், அரிசியைப் பதுக்கி வைத்துக்கொண்டு அதனை சாதாரண நுகர்வோருக்கு வழங்காமல், உணவகங்களுக்கு  மாத்திரம் விற்பனை செய்து வந்தமை சோதனையின் போது அம்பலமானது.

இந்த முற்றுகையின் போது வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ய மறுத்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தகர்களுக்குப் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.