ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலப் பிரகடன வழிகாட்டல்கள் பிரயோகிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் விடுவிக்கப்பட்ட பொது அறிவிப்புக்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி வன்முறைகளைத் தூண்டக்கூடிய போலித்தகவல்கள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில், தகவல்களின் சரியான தன்மையை மாத்திரம் அடிப்படையாகக்கொண்டு குற்றவியல் சட்டப்பிரிவுகளின்கீழ் அக்கருத்துக்களை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக்கூடாது எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
பேரனர்த்த நிலையை அடுத்து கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்ட முதலாம் இலக்க அவசரகாலநிலை பிரகடனத்தின் விதிகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்குக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் ‘தித்வா’ சூறாவளியை அடுத்து நாட்டில் ஏற்பட்ட தேசிய அனர்த்தநிலை தொடர்பில் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு, இவ்வனர்த்தத்தின் விளைவாக பாரியளவிலான உயிரிழப்புக்கள் மற்றும் சொத்துச்சேதங்கள் பதிவாகியிருப்பதையும், இதிலிருந்து மீள்வதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் கடினமான நடவடிக்கைகளையும் அங்கீகரித்திருக்கிறது.
அதேவேளை நாட்டுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்து, அவற்றைப் பாதுகாத்து, மேம்படுத்தியவாறு மீட்சிக்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இக்கடிதத்தின் ஊடாகத் தாம் முன்வைத்திருக்கும் அவதானிப்புக்களும், பரிந்துரைகளும் பெரிதும் உதவும் எனவும் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலநிலையின் கீழான விதிகள் இதற்கு முன்னைய சில சந்தர்ப்பங்களில் முன்னைய அரசாங்கங்களினால் பயன்படுத்தப்பட்டதாகவும், இருப்பினும் அவற்றில் சில விதிகள் நாட்டின் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான சரத்துக்கும், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கும் முரணானவையாகக் காணப்படுவதாகவும் தமது கடிதத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இவ்விதிகளில் அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடைய குற்றங்களாக வரையறுக்கப்பட்டுள்ள சில விடயங்கள், சட்டரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் கரிசனை வெளியிட்டுள்ள ஆணைக்குழு, தமது ஒப்புதலை வழங்கக்கூடிய வயதில் உள்ள நபர்களுக்கு இடையில் நிகழும் பாலியல் நடத்தைகளுடன் தொடர்புடைய குற்றங்களாக தண்டனைச் சட்டக்கோவையின் 365 மற்றும் 365ஏ பிரிவுகளின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விடயங்கள் இவ்விதிகளிலும் உள்வாங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவாக தண்டனைச் சட்டக்கோவையின் மேற்குறிப்பிட்ட பிரிவுகளை நீக்குமாறு தம்மால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட பரிந்துரையை ஆணைக்குழு மீள நினைவுறுத்தியுள்ளது.
அதுமாத்திரமன்றி ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலப் பிரகடன விதிகள் பிரயோகிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் விடுவிக்கப்பட்ட பொது அறிவிப்புக்கள் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. அத்தோடு அரச அதிகாரிகளுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பது என்பது அரசியலமைப்பின் 14(1)(ஏ) பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் ஓரங்கமாகும் எனவும் ஜனாதிபதிக்கான கடிதத்தில் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக அவசரகால நிலைகளின்போது உண்மைகளையும் பொய்களையும் வேறுபிரிப்பது மிகக்கடினம் என்றும், ஆனால் வன்முறைகளைத் தூண்டக்கூடிய போலித்தகவல்கள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில், தகவல்களின் சரியான தன்மையை மாத்திரம் அடிப்படையாகக்கொண்டு குற்றவியல் சட்டப்பிரிவுகளின்கீழ் அக்கருத்துக்களை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக்கூடாது என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.


