இந்தியாவுடனான இரகசிய ஒப்பந்தத்தின் விளைவாகவே தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன!

இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை வெளிப்படுத்துமாறு நாம் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் கோரியிருக்கின்றோம். ஆனால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அதன் பிரதிபலனாக இன்று பலவந்தமாக தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அதனால் நோயாளிகள் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை வெளிப்படுத்துமாறு நாம் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் கோரியிருக்கின்றோம். வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதால் அவற்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது எனக் கூறினர். அதன் பின்னர் அந்த உடன்படிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் அதன் உள்ளடக்கங்கள் என்ன என்பது இதுவரையிலும் யாருக்கும் தெரியாது.

இதன் பிரதிபலனாக தற்போது தரத்தில் குறைந்த சர்வதேச தர நியமங்களுக்கு உட்படாத மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். இதற்கு முன்னர் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட போது, அவற்றின் விலைகள் மற்றும் தரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. ஆனால் இன்று விலையை பற்றி மாத்திரம் கவனம் செலுத்தி தரத்தில் குறைவான மருந்துகளை இறக்குமதி செய்கின்றனர்.

இவ்வாறு தரக்குறைவான மருந்து பாவனையாளர்கள் நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தரமான மருந்துகள் உள்ளன. ஆனால் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய வேண்டும் என்பதற்காக தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் காரணமாக எமக்கு தெரிவொன்று இல்லாது போயுள்ளது. அவர்கள் வழங்கும் மருந்தை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் தரமற்ற மருந்து கொள்வனவு விவகாரத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் சிறை சென்றார். தற்போதைய சுகாதார அமைச்சரின் நடத்தைகளிலும் அவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறானதொரு விடயத்துடன் தொடர்புபடுவார் என நாம் எதிர்பார்க்கவில்லை. அவர் அறியாமல் அதிகாரிகளால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகமும் எழுகிறது.

இது இவ்வாறிருக்க இன்று வைத்தியசாலைகளில் பாரதூரமான மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்கு இன்னும் இந்த அரசாங்கத்தால் தீர்வு வழங்கப்படவில்லை. சுகாதாரத்துறையில் காணப்படும் இந்த பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.