இரு ஆண்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

நாட்டில் டெங்கு பரவலை முழுமையாக ஒழிப்பதற்கான இரு ஆண்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் இரண்டு வருடக் காலப்பகுதிக்குள் செயற்படுத்த உள்ளதோடு, அத்திட்டம் வெற்றி பெற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (5) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் தற்போதைய நிலவரம், நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையில் உள்ள குறைபாடுகள் மற்றும் அவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்து எதிர்வரும் காலங்களில் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை வலுவூட்டுவது தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காகவே மேற்படி கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உரையாற்றுகையில்,

“இந்நாட்டில் டெங்கு பரவலை முழுமையாக ஒழிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் இரண்டு வருடக் காலப்பகுதிக்குள் செயற்படுத்துவது அவசியம்.

கடந்த சில நாட்களில் டெங்கு பரவல் தீவிரமடைந்த சந்தர்ப்பத்திலும், சுகாதாரத் துறையின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் தனது பணியை முன்னெடுத்திருந்தமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

அத்தோடு டெங்கு நோயாளர்கள் குறைவாக அடையாளம் காணப்படும் நாட்களில் நுளம்பு ஒழிப்பு அல்லது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வலுவூட்டுவது அவசியமாகும்.

சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் இலக்கு வைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த வேண்டும்” என்றார்.

இதேவேளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் கபில கண்ணங்கர கருத்து தெரிவிக்கையில்,

“டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகிய கடந்த காலப்பகுதிகளில் பல பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையின் பலனாக, தற்போது டெங்கு பரவலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளது. அந்தவகையில் நாளொன்றுக்கு 1,300 வரை டெங்கு நோயாளர்கள் பதிவாகிய நிலையில், தற்போது நாளொன்றுக்கு 350 தொடக்கம் 400 வரையான நோயாளர்களே பதிவாகுகின்றனர். ஆகையால் எதிர்வரும் பருவகால மழையைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது அவசியம்” என்றார்.