அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்த காலங்களில் ஜே.வி.பி கொண்டிருந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல், மிகவும் தந்திரமான முறையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். அதேநேரம் அரசாங்கம் என்றவகையில் இறையாண்மையுள்ள நாடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிப்பதற்கு ஜனாதிபதிக்கு முடியாமல் போயிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற அந்நியச் செயலாவணி சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
உலக வல்லரசுகளால் தற்போது ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி ஈரானை முழுமையாக இல்லாமல் செய்யவும், மத்திய கிழக்கில் தமது மேலாதிக்கத்தை செலுத்தவும் டிரம்ப் நிர்வாகமும் இஸ்ரேலின் நெதன்யாகுவின் நிர்வாகமும் இணைந்து முழு மத்திய கிழக்கையும் யுத்த வலயமாக மாற்றியுள்ளன.
இந்த நிலைமை முழு உலகத்தையும் அச்சத்திற்குள் தள்ளியுள்ளது. நாடென்ற வகையில் எமக்கும் இது பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய கிழக்கில் 10 இலட்சம் வரையிலான இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். அத்துடன் எரிபொருள் வளம், எரிவாயு வளம் தொடர்பான பிரச்சினைகளும் காணப்படுகின்றன. இது எமது நாட்டின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை என்ன என்று உலகம் பார்த்துக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதி இந்த சபையில் இது தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இதன்போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தவறு, அங்கு ஆன்மீக தலைவரை கொலை செய்தது தவறு என்று நாட்டின் ஜனாதிபதியாக இந்த பாராளுமன்றத்தில் யோசனையொன்றை நிறைவேற்றி உலகத்திற்கு செய்தியொன்றை வழங்குவார் என்று நம்பினோம். ஆனால் ஜனாதிபதி அது தொடர்பில் கதைக்காமல், அந்த விடயத்தை தவிர்த்து அமைச்சர்கள் கூற வேண்டிய விடயங்களையே கூறினார். குறிப்பாக வலுசக்தி அமைச்சர் கூற வேண்டியவற்றையும் வர்த்தக அமைச்சர் கூற வேண்டியவற்றையும், வெளிவிவகார அமைச்சர் கூற வேண்டியவற்றையுமே ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் எரிபொருள் இருக்கின்றதா? இல்லையா? எவ்வளவு எரிபொருள் இருக்கின்றது என்பதனையே ஜனாதிபதி கூறினார். இதனை கூறுவதற்கு ஜனாதிபதி தேவையில்லை. அமைச்சர்கள் உள்ளனர். அதற்காகதானே அவர்கள் இருக்கின்றனர். உலக யுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஜனாதிபதிக்கென சில பொறுப்புகள் உள்ளன. அதனை செய்யாமல் அமைச்சர்களின் விடயங்களை கூறினால் அமைச்சர்கள் இருப்பதில் பயனில்லையே. கல்வி உள்ளிட்ட என்ன பிரச்சினையென்றாலும் ஜனாதிபதியே கதைக்கின்றார்.
ஆனால் அவர் மிகவும் தந்திரமாக சந்தர்ப்பவாதியாக அவரின் அரசியல் செயற்பாட்டில் ஜே.வி.பி கடந்த காலங்களில் கொண்டிருந்த நிலைப்பாட்டை இன்று வெளிப்படுத்தவில்லை. எதிர்க்கட்சியில் இருந்த போது அமெரிக்கா, இஸ்ரேல் உலகில் மற்றைய நாடுகளுக்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டை அவதானித்துள்ளோம். அவர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். வெனிசுலாவுக்கு தாக்குதல் நடத்தும் போதும் எதிர்ப்பை வெளியிட்டனர். இப்போது எங்கே அந்த வெளிப்படைத்தன்மை. ஜனாதிபதி இந்த விடயத்தை கதைக்கவில்லை. அமெரிக்கா காங்கிரஸ் இந்த தாக்குதலை சட்டவிரோதம் என்று கூறுகின்றது. சில நாடுகள் அமெரிக்காவுக்கு தமது இடங்களை பயன்படுத்த இடமளிப்பதில்லை.
ஜே.வி.பி போன்ற அரசியல் இயக்கங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கட்டியெழுப்பி அதனுடாக ஆட்சிக்கு வந்த பின்னர் அது தொடர்பில் இப்போது கதைப்பதில்லை. அது தொடர்பில் கதைக்காமல் ஜனாதிபதி மெதுவாக நழுவிச் சென்றுள்ளார். அமைச்சரவை பேச்சாளர் ஆன்மீக தலைவர் கொல்லப்பட்டமைக்கு கவலை தெரிவிப்பதாக கூறியுள்ளார். அதற்கு மேல் ஒன்றும் கூற முடியாமல் இருக்கின்றனர். கவலை வெளியிடுவதற்கு ஆன்மிக தலைவர் இருதய நோயால் மரணிக்கவில்லை.
இந்த நாட்டில் இதுபோன்ற நிலைமைகளில் அச்சமின்றி தீர்மானங்களை எடுத்த தலைவர்கள் இருக்கின்றனர். மாற்றமில்லாத வெளிநாட்டு கொள்கைகளை கொண்டவர்கள் இருந்தனர். அவர்களை விடவும் நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள் என்று நினைத்தோம். ஆனால் இப்போது நீங்கள் முழுமையாக காட்டிக்கொடுப்பதையே செய்துள்ளீர்கள். ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஒரு வசனமேனும் பேசாமல் போய்விட்டார். ஏகாதிபத்தியத்துடன் இணைந்த இஸ்ரேல் சார்பான ஆட்சியாளர்களாக மாறியுள்ளீர்கள். நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் முதலில் அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் போயிருப்பீர்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் முற்றிலும் மாறிவிட்டீர்கள்.
ஈரான் என்பது எமக்கு மிகவும் உதவிகளை செய்த நாடாகும். அபிவிருத்தி நடவடிக்கைகள், எரிபொருள் வழங்கல் ஆகியவற்றில் உதவிகளை செய்துள்ளது. 2015இல் பெற்ற எரிபொருளுக்கான பணத்தையும் இன்னும் செலுத்தி முடிக்கவில்லை. நாங்கள் அந்த நாட்டுக்கு கடன்பட்டுள்ளோம். அவ்வாறான நாட்டுக்காக முன்னிற்பதற்கு எமக்கு முடியாமல் இருக்கின்றது.
அதேவேளை இஸ்ரேலின் செயற்பாடுகள் இந்த நாட்டிலும் அதிகரித்துள்ளது. வீசா கட்டணம் இன்றி இஸ்ரேலியர்களுக்கு இங்கு வருவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. ஐடிஎப் சிப்பாய்கள் பெருமளவிலானோர் கிழக்கு மாகாணத்தில் முகாம்களை அமைத்துள்ளனர். உங்களின் அரசாங்கத்தில் இது குறையும் என்று நினைத்தோம். ஆனால் இலவச வீசாவை வழங்கியுள்ளீர்கள். இந்த யுத்தத்தின் ஊடாக முழு உலகமும் இஸ்தீரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் எமது மாறாத வெளிநாட்டு கொள்கைகளை பின்பற்ற வேண்டும். அந்த கொள்கையை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.




