பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக நிறுவனத் தலைவர்களுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் தொழில்துறை திறனை மேம்படுத்துவதற்கு இலங்கை பட்டய ஊடக வல்லுநர் நிறுவனம் என்ற பெயரில் நிறுவனமொன்றை நிறுவுவதற்கு இலங்கை ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்படுகிறது என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
2025.12.31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் 876 பிராந்திய ஊடகவிலாளர்களுக்கு ஊடக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான ஊடக செய்தி சேகரிப்பு தொடர்பான கொடுப்பனவுகள் சில ஊடக நிறுவனங்களால் தாமதமாக வழங்கப்படுகின்றன என்று தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக நிறுவனத் தலைவர்களுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு உயர்கல்வி உதவித்தொகை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபா 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை இந்த வருடத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களின் தொழில்துறை திறனை மேம்படுத்துவதற்கு இலங்கை பட்டய ஊடக வல்லுநர் நிறுவனம் என்ற பெயரில் நிறுவனமொன்றை நிறுவுவதற்கு இலங்கை ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்படுகிறது என்றார்.





