இளைஞர்களை பாதாள உலகுக்குத் தள்ளியவர்கள்,பயன்படுத்தியவர்கள் யாவர்?

இலங்கை இளைஞர்களில் ஒரு பகுதியினரை பாதாள உலகத்தினுள் தள்ளியவர்கள், அவர்களைப் பயன்படுத்தியவர்கள் யாவர் என்பதை அறிய வேண்டியது அவசியமாகும் இது காலத்தின் கட்டாய தேவையாகும். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

அவர் சனிக்கிழமை (18) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிகையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எதிர்காலத் தலைவர்களாக, எதிர்காலத்தை வடிக்கும் சிற்பிகளாக மாற வேண்டிய இளைஞர்களை ஆக்கவழிக்குள் கொண்டு செல்லாமல், அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் அதிகார சத்திகள், அரசியல்வாதிகள் யாவர் என்பதை இனங்காண வேண்டியது அவசியமாகும். அவர்களுக்குரிய தண்டனைகளும் அவசியமாகும்.

பாதாள உலகினுள் தள்ளப்படும் இளைஞர்கள் கொலை, கொள்ளை, போதைப்பொருள் வணிகம், பாலியல் பலாத்காரங்கள், போன்ற மோசமான பாதகச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஜனாதிபதிகளாக பதவி வகித்த ஜெயவர்தனா, பிரேமதாச, சந்திரிககா, மகிந்த ராஜபக்ஸ, கோத்தாபாய ராஜபக்ஸ, ரணில் விக்கிரமசிங்க, போன்றவர்களின் ஆட்சிக் காலங்களில், பாதாள உலக தாதாக்கள் என்னும் எதிர் மறைக் கலாசார சட்ட விரோதர்களும் தமது கைவரிசைகளைக் காட்டி வந்துள்ளனர்.

கோணாகல சுனில், சொத்தி உபாலி, பெத்ததகன சஞ்சீவ, கஜ்ஜா, ஜுலம்பிட்டிய அமரே, சம்பத் மனம்பபேரி, கெகல்பத்ர பத்மே, என்று பல இளைஞர்கள் அரசியல் வாதிகளின் தேவையாளர்களாக இருந்துமுள்ளனர்.

சட்டவிரோத சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு கொல்லப்பட்டும், தண்டிக்கப்பட்டும் உள்ளனர். பொட்ட நவ்பர் என்னும் குடு தாதா தனது சகாவான குடு தெரோசா என்பவருக்குத் தண்டனைத் தீர்ப்பை அளித்தமைக்காக சரத் அம்பேபிட்டிய என்ற மேல் நீதிமன்ற நீதிபதியை தனது கையாட்கள் மூலமாக தெருவில் சுட்டுக்கொன்ற வரலாறும் உண்டு.

மொத்தத்தில் சில அதிகார சக்திகள் அரசியல் வாதிகளால், உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும், பாதாளர்கள் தமது தேவை முடிந்த பின்னர், கைகழுவி விடுகின்றனர்,கொன்றும் விடுகின்றனர்.

வறுமை, கல்வி அறிவின்மை, தொழிலின்மை, பிறழ்வான சூழல் போன்றவற்றால் பாதிக்கப்படும் இளைஞர்கள் யுவதிகள் போதைப்பொருள் வலைப் பின்னல், பாதாள சூனியச்சக்கரம் என்பவற்றால் வீழ்த்தப்பட்டு சில அரசியல்வாதிகளின் ஏவலாளிகளாக மாறிப்பின்னர், இளவயதிலேயே பலிக்கடாக்கள் ஆகி விடுகின்றனர்.

பலி கொடுப்பவர்கள் அரசியல்வாதிகளாகவும், அரசியல் தலைவர்களாகவும் இருப்பதுண்டு. பெண்கள் மென்மையானவர்கள் என்பார்கள், ஆனால் அவர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு குடு தெரேசா, இசாரா செவ்வந்தி போன்றவர்கள் உதாரணர்களாவர்.

எனவே, இளைஞர் யுவதிகளை தவறான பாதைகளுக்கு இட்டுச்சென்று அவர்களது எதிர்காலத்தைச் சூனியமாக்கும் அதிகார சக்திகள், அரசியல்வாதிகளையும் சட்டப்பிடியில் இருந்து அரசாங்கம் தப்பவிடக்கூடாது. வளமான நாடு, அழகான வாழ்க்கையை ஏற்படுத்த இதுவும் அவசியமானதாகும் என்றார்.