ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக் கூடாது!

இலங்கைக்கு அருகே ஈரான் போர்க் கப்பல் தாக்கப்பட்ட சம்பவத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக் கூடாது.அவ்வாறு குற்றஞ்சாட்டுவது தவறானது. இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது கரம் கொடுக்க இந்தியா தான் முன்வரும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம். குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

தற்போது நடக்கும் போர் சூழல் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். எமது நாட்டில் நடந்த போரில் எமது மக்கள் பாதிக்கப்பட்டதன் வேதனையை நாங்கள் அறிவோம். இதனால் போர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. போர் தொடர்பில் குரல் கொடுப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் எண்ணக்கருவை பார்க்கும் போது மிக உச்சக்கட்ட கருத்தையே கூறுகின்றனர்.

ஆனால் எமது இனம் சார்ந்த போராட்டத்தின் நியாயத்தை கதைப்பதற்கு இங்கு எவரும் இருக்கவில்லை என்ற கவலையை நான் வெளிப்படுத்துகின்றேன். அப்போது இந்த பாராளுமன்றத்திலும் பேசுவதற்கு எவரும் இருக்கவில்லை.

இதேவேளை ஈரான் போர்க் கப்பல் இலங்கையில் அருகில் தாக்கப்பட்டமைக்கு இந்தியாவே பொறுப்பு என்றெல்லாம் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தியாவானது இங்கு பொருளாதார நெருக்கடிகள் வரும் போது வர வேண்டும். அனர்த்தங்களின் போது இந்தியா வர வேண்டும்.

ஆனால் சினேகபூர்வ பயிற்சியில் காலம் முடிந்து வரும் வழியில் இங்கு தங்குவதற்கு கேட்டதாக கூறப்படும் நிலையில் ஏன் இந்தியாவை குறை சொல்கின்றீர்கள் என்று தெரியவில்லை. எவ்வாறாயினும் இந்த விடயத்தில் நீங்கள் இந்தியாவை குற்றஞ்சாட்டக்கூடாது. குற்றஞ்சாட்ட இயலாது. அவ்வாறு குற்றஞ்சாட்டுவது தவறான விடயாகும் என்றார்.