உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் ; உணவக உரிமையாளர்களிடம் ஹர்ஷன ருக்ஷான் வலியுறுத்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை எக்காரணம் கொண்டும் உயர்த்த வேண்டாம் என அகில இலங்கை ஹோட்டல் மற்றும் உணவக  உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (22) கொழும்பில் இடம்பெற்ற அவசர செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் விலை உயர்வு என்பது தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள ஒரு நெருக்கடியாகும். இதற்காக நுகர்வோரைத் தண்டிப்பது முறையல்ல. எமது உணவகங்களுக்கு வருகை தரும் கர்ப்பிணித் தாய்மார், முதியவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் நாளாந்த கூலித் தொழிலாளர்களின் நிலையை  கருத்தில் கொள்வது அவசியம். அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது. ஏற்கனவே எரிவாயு விலை உயர்வு  காரணமாக  உணவுப் பண்டங்களின்  விலைகளை அதிகரித்திருந்தோம். எனவே, மீண்டும் ஒரு சுமையை மக்கள் மீது ஏற்ற வேண்டாம் என அனைத்து உணவக உரிமையாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

அதேவேளை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, தேங்காய் எண்ணெய், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் எவ்வித நியாயமுமின்றி கறுப்புச் சந்தையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவாவிட்டாலும், சில மாஃபியா கும்பல்கள் விலைகளைத் தீர்மானிக்கின்றன. நுகர்வோர் விவகார அதிகார சபை தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது. எனவே, இந்த விலை மோசடியைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை முப்படையினரின் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தற்போதைய இக்கட்டான சூழலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் அரசியல் வேறுபாடுகளைத் துறந்து ஒன்றிணைய வேண்டும். மக்களைப் பட்டினியில் இருந்து காப்பாற்றவும், சிறு வணிகர்களைப் பாதுகாக்கவும் ஒரே மேடையில் நின்று தீர்மானங்களை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றார்.