ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்துள்ளது.
இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்:- “வடக்கு மாகாணத்தின் கல்விச் சாதனைகள் கடந்த ஆண்டுகளை விட இம்முறை மிகச்சிறந்த நிலையை எட்டியுள்ளன.
இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் (பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்) 9 ஆயிரத்து 191 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 65.19 சதவீதமாகும். இதன்மூலம் மாகாணங்களுக்கு இடையிலான தரவரிசையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், உயிரியல் பிரிவு மற்றும் கலைப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதத்தில் தேசிய ரீதியில் முதலிடத்தையும், பௌதீக விஞ்ஞானம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதிபெற்ற மாணவர்களின் சதவீதத்தில் தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தையும் வடக்கு மாகாணம் பெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றவர்களின் வீதத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்த வடக்கு மாகாணம், இம்முறை தனது அடைவுமட்டத்தை மேலும் உயர்த்தி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
அதேவேளை, பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இம்முறை வடக்கு மாகாண ரீதியாக 534 மாணவர்கள் சகல பாடங்களிலும் 3 ஏ பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். இது தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் 3.79 சதவீதமாகும்.
3 ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் வீதத்தின் அடிப்படையிலான தரவரிசையிலும் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து மேலுமொரு சாதனையைத் தனதாக்கியுள்ளது.” – என்றுள்ளது.




