உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்க முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க எவராலும் முடியவில்லை. அதனால் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த தாக்குதல் சூத்திரதாரியை பெயரிடுவார்கள் என்றே முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் நம்பினார்கள். ஆனால் இந்த அரசாங்கத்துக்கும் இதுவரை சூத்திரதாரியை வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, 2025 ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பெயரிடுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் 2026 ஏப்ரல் 21ஆம் திகதி கடந்தும் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தினால் பெயரிட முடியாமல் போயிருப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக கிறிஸ்தவ சகோதரர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அதேநேரம் இந்த தாக்குதல் காரணமாக முஸ்லிம் சமூகத்தில் கெளரவமாக இருந்துவந்த ஜமாத்தே இஸ்லாமி அமைப்பினர் தலைவராக இருந்த அஷ்ஷைக் ஹஜ்ஜுல் அக்பர், முஸ்லிம் சமூகத்துக்காக நீதிமன்றங்களில் குரல்கொடுத்துவந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், இளம் எழுத்தாள் அஹ்னப் ஜெசீம், அரசியல் தலைவர்களான ரிஷாத் பதியுதீன், அஸாத்சாலி, வைத்தியர் ஷாபி மற்றும் உலமாக்கள் பலர் அநியாயமாக கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டனர்.
அதேபோன்று இந்த தாக்குதலுக்கு பின்னர் இராணுவத்தினர் சோதனைகளை மேற்கொள்ளும்போது எமது பள்ளிவாசல்களுக்குள் நாய்களை எடுத்துச்சென்று, அங்கிருந்த அல்குர்ஆன் உள்ளிட்ட மார்க்க புத்தகங்களை அசிங்கப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தனர்.இந்த குண்டுத்தாக்குதலை முஸ்லிம் சமூகம் கண்டித்தது. சில இனவாதிகள் இந்த தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம் சமுகத்துக்கு எதிராக இனவாத கருத்துக்களை பரப்பிவந்தனர்.
எமது நாட்டில் மக்கள் விடுதலை முன்னணி ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தியபோது, அதில் கொள்ளப்பட்டவர்களின் சடலங்களை அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணிக்கு கையளித்து, அவர்கள் அடக்கம் செய்யப்பட்டவர். அதேபோன்று வடக்கு கிழக்கில் விடுதலை புலிகளின் யுத்தத்தின்போது இராணுவத்தினரால் காெலை செய்யப்பட்ட விடுதலை புலி உறுப்பினர்களின் சடலங்கள் , விடுதலை புலிகளுக்கு ஒப்படைக்கப்பட்டன. ஆனால் ஏப்ரல் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்டு கொள்ளப்பட்ட எவருடைய சடலத்தையும் அவர்களது குடும்பங்கள் பொறுப்பேற்கவில்லை. அவர்களது சடலங்களை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யக்கூடாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிவித்திருந்தது.
மேலும் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ், ரணில் விக்ரமசிங்க எவராலும் இந்த தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்க தவறினார்கள். அதனால் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த தாக்குதல் சூத்திரதாரியை பெயரிடுவார்கள் என்றே முஸ்லிம் மக்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் நம்பினார்கள். ஆனால் இந்த அரசாங்கத்துக்கும் இதுவரை சூத்திரதாரியை வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கிறது. அதனால் குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் சமூகம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது.
அதேபோன்று ஏப்ரல் குண்டுத்தாக்குதல் விசாரணையை திசை திருப்பும் நோக்கில் புத்தகம் எழுதியுள்ள உதய கம்மன்பில, இனவாத கருத்துக்களை தெரிவித்துவரும் சரத் வீரசேகர போன்றவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று உதயகம்பன்பிலவின் புத்தக வெளியீட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் சென்றிருந்தார். ஆனால் அவர் அவருக்கு வாக்களித்த தமிழ் முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றார்.




