உலகளாவிய நெருக்கடிகள், நடவடிக்கைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் அவதானம்

உருவாகிவரும் உலகளாவிய நெருக்கடி நிலைமையால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் மற்றும் அதற்கு முகங்கொடுக்கும் விதத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வா தலைமையில் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கௌசல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அகலகட, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க, நிமல் பலிஹேன, திலின சமரகோன், சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் சம்பிக்க ஹெட்டியாராச்சி ஆகியோரும், குழுவின் தலைவருடைய அனுமதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இக்குழுக் கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கி, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வலுசக்தி அமைச்சு,  கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும்,  அவற்றுடன் இணைந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இலங்கை மத்திய வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அதிகாரிகள், தற்பொழுது உருவாகிவரும் உலக நெருக்கடி நிலைமையினால் இலங்கையில் அதிகமாகப் பாதிக்கப்படக் கூடிய துறைகள் குறித்தும், அத்துறைகளில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தனர்.

அதேநேரம், அமைச்சுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் தமது திட்டங்கள் மற்றும் தயார்ப்படுத்தல்கள் குறித்தும் குழுவுக்குத் தெளிவுபடுத்தினர்.

மேலும் வாசிக்கicon

மேலும் கண்டறிக
ஜோதிட ஆலோசனை சேவை